சமீபகாலமாக தமிழ்சினிமாவில் வரும் சில படங்கள் நம்மை வெகுவாக கவனம் ஈர்க்கின்றன. காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானரில் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக நாம் வாழ்கிற வாழ்க்கையை யோசிக்க வைக்கின்றன.
அப்படிப்பட்ட நல்ல படங்களின் வரிசையில் இதோ சமுத்திரக்கனியின் ‘அப்பா.’
நம்மில் எத்தனை பேர் நாம் நம் குழந்தைகளை அவர்களின் இயல்பிலேயே வளர விடுகிறோம்.
இந்தக் கேள்விக்கு சமீபகால பெற்றோர்களின் பதில் நிச்சயமாக உண்மையாக இருக்காது.
குழந்தைகள் விளையாடுகிற வயதில் அவர்களை படி படி என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டோம். அவர்களுக்கு எதில் ஆர்வமோ அதற்கு மாறாக நாம் ஒன்றை அவர்களிடம் வம்படியாக திணிக்கிறோம். ஒரு எந்திரம் போல குழந்தைப் பருவத்திலேயே வாழ்க்கையை கற்றுக் கொள் என்கிறோம். இப்படி அவர்களின் அந்தந்த வயசுக்கான இயல்பை மீறி வளரும் குழந்தைகளின் வாழ்க்கைத்தரம் இந்த சமுதாயத்தில் எப்படிப்பட்டதாக அமையும்?
இந்தக் கேள்விக்கு ”குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள். அதுதான் ஒவ்வொரு அப்பாக்களும், அம்மாக்களும் குழந்தைகளுக்கு செய்யும் மிகப்பெரிய கடமை” என்பதை பொட்டில் அடித்தாற்போல் சொல்கிற படம் தான் இந்த ‘அப்பா.’
சத்தியமாக ஒவ்வொரு தமிழ்சினிமா ரசிகனும் கைதட்டிப் பாராட்டி பெருமிதத்தோடு வரவேற்க வேண்டிய படம். இப்படி ஒரு சிந்தனை இயக்குநர் சமுத்திரக்கனிக்கு ஏற்பட்டது நவீன தமிழ்ச் சமுதாயத்துக்கு அவசரம் மட்டுமல்ல, அவசியமும் கூட! இந்தப் படத்தைப் பார்த்து ஒரு நூறு அப்பாக்களாவது திருந்தினால் அது படத்துக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, இந்த சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றி. அந்த மாற்றம் நிச்சயம் நிகழும் என்பது உறுதி.
ஒரு அப்பா இல்லை. படத்தில் நான்கு விதமான அப்பாக்கள்.
அவர்களிடம் நான்கு விதமான சூழல்களில் குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதே கதை.
ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்க்கைப் பின்னணியையும் சுவாரஷ்யம் கூட்டி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சமுத்திக்கனி.
விளையாட வேண்டிய வயதில் தனது மகனை ப்ளே ஸ்கூலில் சேர்க்க ஆசைப்படுகிறார்… இல்லை இல்லை அடம் பிடிக்கிறார்… சமுத்திரக்கனியின் கோபக்கார மனைவி. ”அவன் படிக்கிறதுக்கு இன்னும் வயசு இருக்கு, விளையாடட்டுமே விடு” என்கிறார் சமுத்திரக்கனி.
எல்லா குடும்பத்திலும் இறுதியில் ஜெயிப்பது பொம்பளையின் கோபம் தானே? பாத்திரம், பண்டங்களை ரோட்டு வரை உருள ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் மனைவி ஆசைப்பட்டது போலவே தனது மகனை ஒரு தனியார் ப்ளே ஸ்கூலில் சேர்க்கிறார்.
ஒருநாள் அந்தப் பள்ளியின் பெற்றோர்கள் சந்திப்புக்கு போகும் சமுத்திரக்கனிக்கு அந்தப் பள்ளியின் கல்வி முறை எரிச்சலைத் தருகிறது.
உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க… ரெண்டு வயசுப் பிள்ளை இந்த தாஜ்மஹாலை செஞ்சதா? யாரையாவது செய்யச் சொல்லி எடுத்து வந்து கொடுத்தா அதை உண்மைன்னு சொல்லுவீங்களா? யாரை ஏமாத்த இந்த நாடகம் என்கிறார்.
நீளும் அந்த வாக்குவாதத்தில் மகனை அந்த தனியார் பள்ளியிலிருந்து நீக்கி வந்து அரசுப் பள்ளியில் சேர்க்கிறார்.
அவ்வளவு தான்.
வீட்டில் மீண்டும் ஒரு புயல் அடிக்கிறது. ‘உங்களாலேயே அவனோட படிப்பு பாழாப்போயிடும்” என்று கோபித்துக் கொண்டு தனது அப்பாவின் வீட்டுக்கு வண்டியேறி விடுகிறாள் மனைவி.
அதன்பிறகு தன் மகன் ஆசைப்பட்டபடியே அவனுக்கு நீச்சலில் ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டு அதில் அவனை ஈடுபட வைத்து போதுமான கல்வியோடு, நீச்சல் போட்டியிலும் சாதிக்கிற அளவுக்கு வளர்த்து ஆளாக்குகிறார்.
படிப்பைத் தவிர தன் மகனுக்கு வேறு எந்த சிந்தனையும் வந்து விடக்கூடாது என்பதை கண் கொத்திப் பாம்பாக சுற்றி சுற்றி வந்து பார்க்கிறார் இன்னொரு அப்பாவான தம்பி ராமையா.
சதா எந்த நேரமும் படிப்பைத் தவிர வேறு எதையும் மாணவர்களுக்கு அண்ட விடாத ஒரு பள்ளியில் சேர்த்து விட, ”அப்பா நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க” என்று அழுது கொண்டே கெஞ்சும் மகனுக்கு அந்தப் பள்ளியின் விடுதியில் நடக்கும் கொடுமைகளைக் கூட கேட்கத் தயாராக இல்லை.
பாவம் அந்த பிஞ்சு மனசு என்ன செய்யும்? அவன் எடுக்கிற அந்த கிளைமாக்ஸ் முடிவு இந்தக் கால அப்பாக்கள் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியோடு சிந்திக்க வைக்கிறது!
தனியார் பள்ளிகளில் படித்தால் தான் நம் பிள்ளை நன்றாகப் படிக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பும் பெற்றோர்களின் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது தம்பி ராமையாவின் கேரக்டர்.
தமிழ்சினிமாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த நடிப்புக் கலைஞர்களில் இவரும் ஒருவர் என்பதை இந்தப்படத்திலும் நிரூபித்திருக்கிறார்.
‘இருக்கிற இடம் தெரியாம வளரணும்டா” என்று சொல்லி சொல்லியே மகனை வளர்க்கும் இன்னொரு அப்பா நமோ நாராயணன்.
கடைசியின் மகனின் வளர்ச்சியும் வயசுக்கேத்த வளர்ச்சியாக இல்லாமல் போய் விட மண்டையில் படிப்பும் பெரிதாக ஏறாமல் போகிறது. ஆனாலும் அவனுக்குள் இருக்கின்ற கவிதைத் திறமையை கண்டுபிடித்து அவனை ஒரு மழலைக் கவிஞராக்கி படிப்பிலும் நம்பிக்கை கொடுத்து மனதால் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்துக்கு கொண்டு வருகிறார் சமுத்திரக்கனி.
என் மகள் மாநிலத்தில் முதலிடத்தில் வந்ததுக்கு நான் காரணமில்லை. எல்லாமே அவள் மட்டும் தான் காரணம். பரீட்சை இருக்கிற நேரத்துல கூட எனக்கு ஒத்தாசையா ஒன்றரை மணி நேரம் கடைக்கு வந்து வேலை செஞ்சிட்டுப் போவாள். நான் அவளை படிக்க வெச்சேன். அவ்ளோதான். மகள் செய்த சாதனைக்கு மகள் மட்டுமே காரணம் தான் என்று மகளை முழுமையாக நம்புகிற இன்னொரு அப்பா.
இப்படி நான்கு விதமான அப்பாக்களின் மன உணர்வுகளை படமாக்கித் தந்திருக்கிறார் சமுத்திரக்கனி.
தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என படத்தின் மூன்று முக்கிய பொறுப்புகளையும் தானே சுமந்திருக்கும் சமுத்திரக்கனி எந்த பொறுப்பையும் சற்றும் சிதறி விடாமல் மிக அழகாக கொண்டு செல்கிறார்.
நான்கு அப்பாக்களில் அவரும் ஒரு அப்பா. இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று பிள்ளைகளும், இப்படிப்பட்ட அப்பாவாக நாம் நம் பிள்ளைகளுக்கு இருந்து விட மாட்டோமா? என்று அப்பாக்களையும் சத்தியமாக ஏங்க வைத்து விடுகிறது படம் முழுக்க சமுத்திரக்கனி சுமந்து வரும் தயாளன் என்கிற அந்த அதி அற்புதமான அப்பா கேரக்டர்!
ஒரு சமயத்தில் மகன் காணாமல் போய் விட அவனை நாள் முழுக்க சைக்கிள் மிதித்தே தேடி அலைந்து ஒரு கட்டத்தில் சோர்ந்து போக அந்த நேரத்தில் வரும் ஒரு தொலைபேசி அழைப்பு மகனின் இருப்பை உறுதி செய்கிறது.
மகனின் வருகைக்காக காத்திருந்து அவனைப் பார்த்ததும் வாரி அணைத்துக் கொண்டு கண்கலங்குவாரே அந்தக் காட்சியில் நாமும் நம்மை அறியாமல் கண் கலங்கி விடுகிறோம்.
‘காக்கா முட்டை’ விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேபிரில்லா, நசத் என படத்தின் நடித்திருக்கிற ஐந்து குழந்தைகளும் அடடா என்ன ஒரு நடிப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அசரடிக்கிறார்கள்.
பேருந்தில் சக வயது சிறுமியான கேபிரில்லாவைப் பார்த்ததும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ்க்கு பயத்துடன் கூடிய இனக்கவர்ச்சி ஏற்பட மகனையும், அந்த சிறுமியும் வீட்டுக்கு கூட்டி வந்து ஒரு கப் காபி கொடுத்து அந்த இடைவெளியை லேசாக்குவது அபாரம் கனி சார்.
அதே சமயத்தில் ”இனிமே இந்த வீட்டுக்கு நீ எப்போ வேணும்னாலும் வரலாம். ஆனா இங்க தான் போறேன்னு சொல்லிட்டு வரணும்” என்று சொல்கிற போது பொதிந்திருக்கிறது நூறு சதவீதம் ‘உண்மை’.
‘நாயை நாம் பாதுகாத்தால் அது கிராமம். நாய் நம்மை பாதுகாத்தால் அது நகரம்’ என்று இரண்டு வரிகளில் நகைச்சுவை உணர்வுடன் கூடிய கவிதைகளை எழுதும் திறமை மகனுக்கு இருந்தும் அதை சட்டை செய்யும் நமோ நாராயணன் மாதிரியான அப்பாக்கள் தான் எத்தனை எத்தனை பேர்?
எங்கு போனாலும் மகளை முழுமையாக நம்புகிற அந்த இஸ்லாமிய அப்பா, வீட்டில் ஆண் துணை இல்லாமல் வளர்ந்தாலும் தனது மகளை சரியாக வளர்க்கும் அம்மா. மழலைக் கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு விழா காட்சிகளில் மட்டுமே வந்து போகிற கவிஞர்கள் யுகபாரதி, பா. விஜய், ‘குழந்தைங்க சரியாத்தான் இருக்காங்க, பெத்தவங்க தான் தப்பா இருக்காங்க’ என்று கோபத்தோடு பொங்குகிற இயக்குநர் சசிகுமார் என படத்தில் வருகிற சின்னச் சின்ன கதாப்பாத்திரங்களும் சரியான தேர்வு.
”எதையெல்லாம் என்கிட்ட சொல்ல முடியோமோ? அதையெல்லாம் செய். எதையெல்லாம் சொல்ல முடியாதோ? அதையெல்லாம் செய்யாதே” என்று கை தட்டல்களை அள்ளுகிற உயிர்ப்புள்ள வசனங்கள் படம் முழுக்க ஆங்காங்கே உண்டு. படத்தில் ஒரு சிறு பாடலைத் தவிர மற்ற இடங்களில் இப்படிப்பட்ட கருத்தாழமுள்ள வசனங்களால் நிரப்பியிருக்கிறார் சமுத்திரக்கனி.
வசனங்கள் இல்லாத இடங்களில் இளையராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு வலுவூட்டியிருக்கிறது.
ரிச்சர்ட் எம். நாதனின் ஒப்பனை இல்லாத ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
ஒரு போதனையாக இல்லாமல் கமர்ஷியல் கலந்து ஒரு பாடமாக தந்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
அப்பா – இது படமல்ல, பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் வாழ்க்கைக்கான பாடம்!