கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த கபாலி படத்தின் டீஸர் மே தினமான இன்று காலை 11 மணிக்கு வெளியானது.
முன்னதாக இன்று டீஸர் ரீலீசாகப் போகிறது என்கிற தகவல் கடந்த ஒருவாரமாகவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
விடுமுறை தினம் என்பதாலும் நேரம் நெருங்க நெருங்க நொடிக்கு நொடி ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் கபாலி டீஸருக்காக ரசிகர்கள் காத்துக்கிடந்தனர்.
சரியாக 11 மணிக்கு டீஸர் யு டியூப்பில் வெளியானதும் ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டது.
சுமார் ஒரு நிமிடம் 6 நொடி ஓடக்கூடிய இந்த டீஸரில் ரஜினிகாந்த் இரண்டு விதமான கெட்டப்புகளில் வருகிறார்.
நெருப்புடா…. என்று பின்னணி குரலில் ரஜினிகாந்த் ஸ்டைலாகப் பேசுகிற காட்சியில் தீப்பொறி பறக்கிறது.
டீஸரில் அடுத்ததாக வரும் ஒரு காட்சியில் ‘ஆமா.. நீங்க ஏன்ணே கேங்ஸ்டர் ஆனீங்க?’ என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க… அதற்கு தனக்கே உரிய பாணியில் புன்னகையை பதிலாகத் தருகிறார் ரஜினி.
இன்னொரு காட்சியில் ‘யார்றா அந்த கபாலி… கூப்புட்றா அவனை’ என்று வில்லன் கிஷோர் கத்த, அப்போது தோன்றும் ரஜினி, “தமிழ்ப் படங்கள்ல மரு வச்சிக்கிட்டு மீசைய முறுக்கிக்கிக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டு, நம்பியாரு ‘ஏ கபாலி’ அப்டீன்னு சொன்ன உடனே, குனிஞ்சி ‘சொல்லுங்க எஜமான்’ அப்டி வந்து நிப்பானே… அந்த கபாலின்னு நினைச்சியா…” என்று கேட்டு நிறுத்தி… “கபாலிடா…” என்று கம்பீரமாகச் சொல்கிறார்.
அடுத்த காட்சியில் 80களில் பார்த்த கெட்டப் ஒன்றில் தலைமுடியை கோதி விட்டு ஸ்டைலாக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நிறைவாக மகிழ்ச்சி என்று புன்னகை செய்கிறார்.
மொத்தத்தில் கபாலி படமும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதை டீஸரே உறுதிசெய்து விட்டது.