11.2 C
New York
Saturday, April 20, 2024

Buy now

Dinesh Master tells the story from the dance to acting -Kuppai kathai

…………………………………………………………………………………………………………………..
நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய கதை சொல்லும் தினேஷ் மாஸ்டர்
 
‘பிரபுதேவா’ நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்ற இவர் தற்போது ‘ஒரு குப்பைக் கதை’ தம மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். .
 
இதில் கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
 நாளை மே-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார் தினேஷ் மாஸ்டர்
 
“சின்னவயதிலேயே எனக்குள் இருந்த நடனத்திறமையை கண்டுபிடித்தது என் சகோதரர்கள் தான். என் அப்பாவும் எனக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க அலைந்தவர் தான். என் சகோதரர்களின் நண்பர்கள் மூலமாக எனக்கு பிரபுதேவா மாஸ்டரின் தம்பியான நாகேந்திர பிரசாத்தின் நட்பு கிடைத்தது.. அது படிப்படியாக வளர்ந்து ராஜூ சுந்தரம், பிரபுதேவா மாஸ்டர்களின் அறிமுகம் கிடைத்தது.
அப்படியே கூட்டத்தில் ஒருவனாக ஆடிக்கொண்டிருந்த என்னை ஒருகட்டத்தில் ‘மனதை திருடிவிட்டாய்’ மூலம் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார் பிரபுதேவா. அதன்பின் விஜய்யின் ‘ஆள் தோட்ட பூபதி’ பாடல் என் வாழ்வில் விளக்கேற்றியது. இறைவன் அருளால் நடன இயக்குனராக இத்தனை வருடம் சீராகப்போய்க்கொண்டிருக்கும் எனது பயணத்தில் இப்போது நடிகராக ஒரு புது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.
ஒருமுறை இயக்குனர் அமீரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றபோது அங்கே இயக்குனரும் ‘ஒரு குப்பை கதை’ படத்தின் தயாரிப்பாளருமான அஸ்லம் வந்திருந்தார். அவர்தான் இந்தக்கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என கூறினார்.. இத்தனைக்கும் அது இயக்குனர் அமீருக்கு சொல்லப்பட்டு அவர் நடிக்க மறுத்த கதை.. அதனால் ஆரம்பத்தில் தயங்கினாலும் பின் என் மனைவியின் ஆலோசனைப்படி இந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.. அதுவும் கூட, இது வழக்கமான ஹீரோ படம் என்றால் நடிக்கும் எண்ணத்தை மூட்டைகட்டி வைத்திருப்பேன். ஆனால் இந்த கதை என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது.
இயக்குனர் காளி ரங்கசாமியும் எனது எளிமையான தோற்றத்தை பார்த்து இந்தக்கதைக்கு நான் பொருந்துவேன் என நம்பினார். நான் பணியாற்றிய படங்களின் பாடல்களில் கூட கதையைவிட்டு வெளியே செல்லாமல் தான் நடனம் அமைப்பேன்.. அதனால் இதிலும் நடிக்கிறேன் என தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் இயக்குனர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அதை மட்டும் செய்துள்ளேன். இந்தப்படம் வெளியானபின் பலரிடம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இந்தப்படத்தை பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்.
இந்தப்படத்தில் குப்பை அள்ளுபவராக நடித்துள்ளேன். இந்தப்படத்திற்காக குப்பை வண்டியுடன் சுற்றினேன்.. நிஜமாகவே குப்பைகளையும் அள்ளினேன். ஒரு குப்பையில் என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அதையெல்லாம் தாண்டி நினைக்காதது எல்லாம் அதில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். குப்பை அள்ளுபவர்களில் சிலர் அவற்றை சகித்துக்கொண்டு வேலை செய்வதற்காகவே குடிக்கிறார்கள் என்பதும் இன்னும் சிலர் குடிக்காமலேயே இந்த வேலையை செய்கிறார்கள் என நேரில் கண்டபோதுதான் குப்பை அள்ளுபவர்களின் வாழ்வின் உண்மையான சிரமங்களும் அவர்கள் எப்படி போற்றி வணங்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன்.
அப்போதிருந்து குப்பை அள்ளுபவர்கள் எதிர்ப்பட்டால் சில நிமிடங்கள் அவர்களுடன் நின்று பேசிவிட்டுத்தான் போகிறேன். குப்பை வண்டிகள் கடந்து சென்றால் மூக்கை பொத்திக்கொள்வார்கள்.. நான் அப்படி செய்வதில்லை. ரோட்டில் குப்பை கிடந்தாலோ, அல்லது யாரவது குப்பையை நடுரோட்டில் வீசினாலோ உடனே அதை எடுத்து அப்புறப்படுத்த மனசு துடித்தது. பொதுவாக குப்பை அள்ளுபவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மாதம் இரண்டுமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்.. நானும் அப்படி ஊசி போட்டுக்கொண்டுதான் இந்தப்படத்தில் நடித்தேன்.
 
இந்தப்படத்தில் எனது உயரத்திற்கு கதாநாயகி கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்படியே து வந்தாலும் கதாநாயகியின் கேரக்டரை கேட்டுவிட்டு, அதில் நடிக்க தயக்கம் காட்டினார்கள். ஒரு வழியாக வழக்கு எண் மனிஷா எனக்கு ஜோடியாக கிடைத்தார். அவரும் என்னைவிட இரண்டு இன்ச் அதிகம் தான். இந்தப்படத்திலும் பாடல்கள் உண்டு.. நான் தான் நடனத்தை வடிவமைத்துள்ளேன். ஆனால் அதுகூட, நான் ஹீரோ என்பதற்காக இல்லாமல் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து யதார்த்தம் மீறாமல் தான் நடனக்காட்சிகளை வடிவமைத்துள்ளேன்.
நடிகனாக ஆகிவிட்டதால் நடனத்தை குறைத்துக்கொண்டு விடுவீர்களா என கேட்கிறார்கள்.. நடனம் எனது குலசாமி போல.. அதை எந்தநாளும் மறக்க முடியாது. நடிப்பு என்பது பழனி முருகன் தரிசனம் போல.. எப்போது அழைக்கிறாரோ அப்போது மட்டும் போய் பார்த்துவிட்டு வரவேண்டியதுதான். 
எப்போதும் பழசை மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான். வெற்றிகளையும் பாராட்டுக்களையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளவும் விரும்பமாட்டேன்.. அதனால் தான் இதுவரை எனக்கு கிடைத்த விருதுகளை கூட வரவேற்பறையில் வைக்காமல் தனியாக ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிட்டேன்” என்கிறார் தினேஷ் மாஸ்டர் வெள்ளந்தியாக .
Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE