Home Movie Reviews

0 662

பாதி படத்தை எடுத்து விட்டு மீதியை முடிக்க முடியாத இக்கட்டான நிலையை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சந்தித்த போது கை கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

இல்லையென்றால் ரசிகர்களுக்கு இப்படி ஒரு புதுவிதமான ரசனைச்சூழல் கிடைத்திருக்காது.

மூன்று பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிப்படமாக தயாரித்து ஒரு பக்காவான ஸ்டோரியுடன் ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘இறுதிச்சுற்று’.

பொசுக்கு பொசுக்கென்று வரும் முன் கோபத்தாலேயே பாக்ஸிங் வீரராகும் தகுதியையும், அதனால் தன் மனைவியையும் மிஸ் பண்ணும் ஹீரோ மாதவன் ‘பொம்பள பொறுக்கி’ என்கிற அடையாளத்தோடு பெண் பாக்ஸர்களுக்கு கோச்சாக வேலை செய்கிறார். அதே முன் கோபத்தால் உயர் அதிகாரியின் கடுங்கோபத்துக்கு ஆளாக, மாதவனை சென்னைக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார் அந்த உயர் அதிகாரி.

ஹரியானாவில் இருந்து சென்னைக்கு வரும் மாதவன் அங்கு அவர் ஒரு பாக்ஸரை உருவாக்கியே தீர வேண்டும்.

அவர் எதிர்பார்ப்புக்கு ஏத்த ஆளாகத் தெரிகிறார் மீனவ குப்பத்தைச் சேர்ந்த துறுதுறு சுட்டிப் பெண்ணான நாயகி ரித்திகாசிங்.

கடலில் கிடைக்கும் மீனை விற்று காசு பார்த்தோமா? அக்கா, நண்பர்களுடன் சேர்ந்து ஊரையே ஜாலியாக சுற்றித் திரிந்தோமா? என்றிருக்கும் ரித்திகாவிடம் தினமும் 500 ரூபாய் செலவுக்கு கொடுத்து அவரிடம் இருக்கும் பாக்ஸிங் திறமையை வெளிக்கொண்டு வர ஆசைப்படுகிறார்.

ஆனால் மாதவன் மீது இருக்கும் ‘பொம்பள பொறுக்கி’ இமேஜால் ஏனோதானோவென்று பயிற்சி எடுக்கும் ரித்விகாவை, முதலில் இந்திய வீரராக்கி பிறகு இண்டர் நேஷனல் லெவலுக்கு கூட்டிச் செல்ல சீரியசாக முயற்சிக்கிறார்.

மாதவனின் அந்த முயற்சிக்கு அடுத்தடுத்த வரும் தடங்கல்களை தாண்டி எப்படி ரித்விகாவை ஜெயிக்க வைக்கிறார்? அதற்கு ரித்விகா ஒத்துழைப்பு கொடுத்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவனுக்கு இது தமிழில் ரீ-எண்ட்ரி!

அறிமுகக் காட்சியில் ஒரு ‘பொம்பளை பொறுக்கி’யாக அடையாளப்படுத்தப்படும் மாதவன் அடுத்தடுத்த காட்சிகளிலும் நடிப்பில் அசால்ட் தான்! மீட்டிங் என்று அழைப்பு வர கையில் பீர் டின்னுடன் கெத்தாக உட்கார்ந்து பேசுவதும் ”மீட்டிங் நேரத்துல சரக்கடிச்சுட்டு வர்றீங்க” என்று ஒருவர் எகிறும் போது ”யோவ் நான் சரக்கடிக்கிற டைம்ல உன்னை யாருய்யா மீட்டிங் வைக்கச் சொன்னா?” என்று பதிலுக்கு எகிறுவதும் செம அப்ளாஸ் ஷாட்ஸ்!

அவர் எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் முகத்துக்கு நேரே பட் பட்டென்று பேசுவதும், ”உன்னை விட எனக்கு அவன்மேல ரொம்பக் கோவம் இருக்கு” என்று சொல்லும் நாசரே ஒரு இக்கட்டான சூழலில் வந்து நிற்கும் மாதவனிடம் ”யோவ் நீ உண்மையிலேயே ரொம்ப நல்லவன்யா” என்று சொல்கிற காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் காதை கிழித்தெடுக்கிறது.

தரமான படத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டுமென்கிற பொறுப்பு நல்ல கலைஞனுக்குரிய பொறுப்பு மாதவனிடம் இருப்பதாகவே இந்தப் படத்தை கருதலாம். ஒவ்வொரு காட்சியிலும் அப்படி ஒரு ஆளுமை!

இவர் இப்படியென்றால் அறிமுக நாயகி ரித்திகா சிங்கோ நடிப்பில் பிண்ணி பெடலெடுக்கிறார். ”யோவ் தூரப்போயா உன் மூஞ்சியப் பார்க்கவே முடியல… ந்ந்தா அந்தம்மாக்கிட்ட மீனை வாங்கு, உனக்கும் அதுக்கும் செம பொருத்தமா இருக்கும், கெழவா தள்ளிப்போயா…” என்று குப்பத்துப் பாஷையில் பேசுகிற காட்சியில் தமிழ்சினிமாவில் இப்படி ஒரு ‘துடிப்பான’ நாயகியைப் பார்த்து எத்தனை நாளாகி விட்டது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அட இவருக்கு இது முதல் படமா..? விட்டா கூத்துப்பட்டறைக்கே ஆக்டிங் சொல்லிக் கொடுப்பார் போல!

ரித்திகாவின் அக்காவாக வரும் மும்தாஸ் சர்க்கார், மாதவனின் மாமனாராக வரும் ராதாரவி, ஜூனியர் கோச்சாக வரும் நாசர், தேவ் ஜாகீர் உசேன் என படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் ரசிகர்களை இருக்கையோடு கட்டிப்போடுகிறது.

ரித்திகாவின் குப்பத்து அப்பாவாக வரும் காளி வெங்கட் காசுக்காக மதம் மாறுவதும், கர்த்தரே.. அல்லோலூயா என்று ஜெபிப்பதுமாக கலகலப்பூட்டுகிறார்.

‘செளகார் பேட்டை செவப்புத் தோலுக்கு ஆசைப்பட்டு சோரம் போயிட்டேயேடா சாமிப்புள்ள..’. ‘சார்,நாங்க கக்கூஸ் கழுவத் தான் லாயக்கு… ஆனா கப்’பு உங்க வாயிலிருந்துல்ல வருது…’ மாதிரியான வசனங்கள் கைதட்டலுக்குரியவை.

ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் வித்தியாசமான கலர் டோனும், சதீஷ் சூர்யாவின் ‘கத்தரி’யின் கூர்மையும் பிரமாதம்..

படத்தின் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் சந்தோஷ் நாராயணின் இசை. பாடல்களை விட்டு விடுங்கள். மாதவனும் – ரித்திகா சிங்கும் இணையும் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பின்னணி இசையை போட்டு விட்டிருப்பார் பாருங்கள். அத்தனை ரசிகர்களையும் புல்லரிக்க வைத்து விடுகிறது அவரது ரம்மியமான இசை!

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, எல்லா விளையாட்டிலும் அரசியல் இருக்கும்! ஆனால் அது இவ்வளவு தூரத்துக்கு இருக்குமா? என்று வெகுஜன ரசிகனும் அதிர்ச்சியடைகிற அளவுக்கு உண்மைகளை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா இது பல உண்மைச் சம்பவங்களின் பதிவு என்பதையும் மறக்காமல் சொல்லி விடுகிறார்.

பொதுவாகவே இந்திய விளையாட்டுச் சந்தையில் இருக்கும் அதிகார வர்க்கத்தினரின் பாலிடிக்ஸ் என்பது வெளி உலகத்துக்கு பெரிய அளவில் தெரியாத விஷயம்.

‘ஜீவா’ படத்தில் கிரிக்கெட்டில் ஒரு சமூகத்தினர் மட்டும் காலங்காலமாக செய்து வரும் ஆளுமையை டைரக்டர் சுசீந்திரன் தோலுரித்துக் காட்டியிருந்தார். அதே பாணியில் இந்தப் படத்தில் குத்துச் சண்டை விளையாட்டில் இருக்கிற, குறிப்பாக பெண்கள் குத்துச்சண்டை விளையாட்டில் இருக்கிற அதிகார வர்க்கத்தினரின் ஏகபோகம், தரங்கெட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட மோசமான பக்கங்களை அம்பலப்படுத்தியிக்கிறார் பெண் இயக்குநர் சுதா கொங்கரா.

அந்த துணிச்சலுக்கும், திறமைக்கும் இந்தாங்க மேடம் ஒரு பொக்கே!

0 647

‘அரண்மனை’ முதல் பாகத்தின் பேய்த்தனமான வெற்றியைத் தொடர்ந்து அதையே ஜெராக்ஸ் எடுத்தது போல ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘அரண்மனை 2′.

சன்னிலியோனை வைத்து படமெடுத்தாலும் அதையும் கவர்ச்சி பிளஸ் காமெடி படமாகத்தான் எடுப்பார் போலிருக்கிறது டைரக்டர் சுந்தர்.சி

முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கு நடிகர், நடிகைகள் மத்தியில் மட்டுமே மாற்றங்களை செய்திருக்கிறாரே தவிர முதல் பாகத்தைப் பார்க்காதவர்கள் இந்த இரண்டாம் பாகத்தை பார்க்கலாம். அதுக்கு ஒரு சான்ஸ் என்று சொன்னாலும் அதில் தப்பேதுமில்லை.

ஊரை காக்கும் அம்மனுக்கு சக்தி இல்லாத நாள் ஒன்றில் பேயோட்டிகள் எல்லோரும் ஒரு இடத்தில் கூடி உட்கார்ந்து கொண்டு சும்மா இருக்கும் ஆவிகளை தூண்டிவிட்டு தங்கள் தொழிலை பெரிதாக்கிக் கொள்ள பூஜை ஒன்றை செய்கிறார்கள்.

அதில் கிளம்பி வரும் பேய்களில் அதீத சக்தி கொண்ட ஒரு பேய் ஊருக்குள் இருக்கும் பெரிய அரண்மனைக்குள் தஞ்சம் புகுந்து விடுகிறது.

அந்த வீட்டின் பெரிய மனிதரான ராதாரவியை கோமா ஸ்டேஜுக்கு கொண்டு போய் விட, அவரது மகன் சுப்பு பஞ்சு என்ன ஆனார் என்றே தெரியாமல் போக, இடையில் வீட்டு வேலைக்காரணும் கொலை செய்யப்பட… இப்படி அடுத்தடுத்து பழி வாங்கும் அந்த பேய் யார்? அதனிடமிருந்து வீட்டில் உள்ளவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? ஏன் அந்த அரண்மனையில் உள்ளவர்களை பழி வாங்கத் துடிக்கிறது? போன்ற கேள்விகளுக்கு ப்ளாஷ்பேக் பிளஸ் பிரம்மாண்ட அம்மன் பாடலோடு அடுத்த பாகத்துக்கு புள்ளி வைத்து சுபம் போடுகிறார் டைரக்டர் சுந்தர்.சி.

ஹீரோ சித்தார்த் என்றாலும் கிளைமாக்சில் கைதட்டல்களை அள்ளிக்கொண்டு போவது என்னவோ சுந்தர்.சி தான். அவரும் முந்தைய பாகத்தில் வந்த கேரக்டரின் தொடர்ச்சியாக வருகிறார்.

சித்தார்த்தின் கவர்ச்சிக் காதலியாக த்ரிஷா! த்ரிஷாவைப் பார்த்து ரசிகர்கள் பயப்படுறாங்களோ? இல்லையோ? கெறங்கி விழுறது கன்பார்ம்! ஏன்னா படத்துல சுந்தர்.சியோட டைரக்‌ஷன் ‘டச்’ அப்படி!

எக்ஸ்ட்ரா கவர்ச்சிக்காகவே பூனம் பாஜ்வாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். ‘அரண்மனை’ முதல் பாகத்தில் வந்தது போலவே இதிலும் செண்ட்மெண்ட் காட்சிகளில் ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார் ஹன்ஷிகா!

முதல் பாகத்தில் சந்தானம், மனோபாலா, கோவை சரளா காம்பினேஷன் காமெடி களை கட்டியது. இதில் சந்தானத்துக்குப் பதில் சூரி! டபுள் மீனிங் வசனங்களோடு கோவை சரளாவை அவர் ஓட்டும் காட்சிகள் செம செம.

ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் கிளைமாக்ஸில் வரும் அம்மன் பாடலில் காட்சிகளுக்கேற்ற பிரம்மாண்ட இசையாக வெளிப்படுகிறது. சில இடங்களில் தேவையில்லாத இரைச்சல். மற்ற பாடல்களில் ‘ஆம்பள’ சாயல் தெரிகிறது.

பூனம் பாஜ்வா சாதாரணமாக உட்கார்ந்து பேசும்போது கூட பின் பக்கத்தில் கேமராவை வைத்து அவரது முதுகையும், இடுப்பையும் திரையில் பெரிதாகக் காட்டி கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.

ஆக்‌ஷன் படங்கள்ல எப்படி லாஜிக் பார்க்கக் கூடாதோ? அதேமாதிரி தான் பேய் படங்கள்லேயும் லாஜிக் பார்க்கக் கூடாதுன்னு சொல்ற மாதிரி தனக்கே உரிய ‘கலகலப்பு’ ஸ்டைல்ல கொடுத்திருக்கிறார் டைரக்டர் சுந்தர்.சி

0 888

”ஜல்லிக்கட்டு காளையை புல்லுக்கட்டு சுமக்க விட்ட கதையாக எதற்காக இப்படி ஒரு பக்கா எண்டர்டெயினர் படத்தை ரிலீஸ் சிக்கலில் சிக்க விட்டார்கள்” என்கிற கேள்வி? படம் பார்த்து விட்டு வெளியே வருகிற அத்தனை ரசிகர்களின் மனதிலும் எழும்பி விட்டிருக்கும்.

தாத்தா – பேரன் பாசப்பிணைப்போடு காதல், ஃபேமிலி, செண்டிமெண்ட், காமெடி என அத்தனை ரசனைகளையும் ஒன்றாக்கி நிஜமான பொங்கல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

நான்கைந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டே கதையை நகர்த்த அல்லல்படும் இயக்குநர்களுக்கு மத்தியில் எக்கச்சக்க நட்சத்திரங்களை படம் முழுக்க உலவ விட்டு அதகளம் பண்ணியிருக்கிறார்கள். ரெண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் ரசிகர்களை கட்டிப்போடுகிறார்கள்.

அத்தனை பேரப்புள்ளைகள் இருந்தும் எல்லோரும் வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்தோடு செட்டிலாகி விட, கூடவே இருந்து பாசம் காட்டுகிற ஒரே பேரன் தான் சிவகார்த்திகேயன்.

அவருக்காக தனது சொத்து பத்துகளை விற்று பங்கு பிரித்து கொடுக்க ஆசைப்படும் ராஜ்கிரண் அதற்கான வேலையில் இறங்குகிறார். இதற்கிடையில் சின்ன வயசிலிருந்தே இவள் தான் உனக்கு என்று அப்பாவால் கை காட்டி விடப்படுகிற கீர்த்தி சுரேஷை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

இன்னொரு பக்கம் அதே ஊரில் அடுத்தவனை மிரட்டியே காசு பார்க்கும் ரெளடியான சமுத்திரகனி நானும் ராஜ்கிரணின் பேரன்களில் ஒருவன் தான் அதனால் எனக்கும் சொத்தில் பங்கு வேண்டுமென்று மல்லுக்கு நிற்கிறார்,

அவரிடமிருந்து பூர்வீக சொத்துக்களை மீட்டு கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் கை பிடித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரிக்க சிரிக்க மதுரை பின்னணியில் காமெடிப்படம். வழக்கமான சிவகார்த்திகேயனின் மேனரிசங்கள், டயலாக் டெலிவரி என ரஜினிமுருகன் கேரக்டரில் கலகலப்பூட்டுகிறார் சிவகார்த்திகேயன். போதாக்குறைக்கு சூரியும் சேர்ந்து செய்யும் அளப்பறையில் தியேட்டரே சிரிப்பு சத்தங்களில் குலுங்குகிறது. சத்யராஜ் – கவுண்டமணி காம்பினேஷன் போல சிவகார்த்திகேயன் – சூரி காமெடி காம்போ சூப்பராக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது.

வில்லனாக வரும் சமுத்திரக்கனியை இப்படி ஒரு கேரக்டரில் எந்தப்படத்திலும் பார்த்திருக்கவில்லை தமிழ்சினிமா ரசிகர்கள். ஊருக்கு ஒருவனாக இப்படிப்பட்ட கெட்ட மனுஷன் இருப்பான் என்கிற கேரக்டர் தான் அவருடையது.

அறிமுகக் காட்சியில் பயங்கர வில்லத்தனத்தோடு அறிமுகமாகிறவர் கிளைமாக்ஸில் பார்த்தியா கொடுத்த 1 லட்சத்தை வாங்கிட்டம்லே… என்று கெத்தாக திரும்பிப் போகும் போது விசில் சத்தம் காதை பிளக்கிறது.

தாத்தாவாக வரும் ராஜ்கிரண் அற்புதமான தேர்வு.

”உங்களுக்கெல்லாம் உங்க பசங்களை பார்க்காம இருக்க முடியாது, அதேமாதிரி தான் என்னாலேயும் உங்களை பார்க்க இருக்க முடியலேப்பா… ஆனால் நீங்க யாருமே எந்த காரணத்தை சொல்லிக் கூப்பிட்டாலும் என்னை பார்க்க வர மாட்டேங்கிறீங்க, அதனால தான் நான் செத்துப் போற மாதிரி நடிச்சி உங்களை வர வெச்சேன்” என்று உருகி அழுகிற காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் பெருமையை கண் முன் கொண்டு வருகிறார் ராஜ்கிரண்.

சின்னச் சின்ன காமெடி டைமிங் வசனங்கள் தான் படத்துக்கு முதுகெலும்பு, படம் முழுக்க அந்த மாதிரியான காட்சிகளை தூவிவிட்டு திரைக்கதை வேகம் எடுக்கிறது.

டி.இமான் இசையில் உம்மேல ஒரு கண்ணு பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் மெலோடி என்றால், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. யூத் காமெடி ட்யூன்!

பாலசுப்ரெமணியத்தின் ஒளிப்பதிவில் கீர்த்தி சுரேஷுக்கு சுத்திப் போட வேண்டும், அப்படி ஒரு கிராமத்து அழகியாக வருகிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.

இதுவும் மதுரைப் பின்னணியில் நகரும் படம் தான். ஆனால் ஒரு காட்சியில் கூட துளி ரத்தம் இல்லை. சிரிக்க சிரிக்க ரசித்து விட்டு வரலாம்! நம்பி வாங்க சந்தோஷமாப் போங்க என்று ட்ரெய்லர்களில் ஒரு வாசகம் வரும், அதை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உண்மையாக்கி பொங்கலுக்கேத்த உண்மையான ஃபேமிலி எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

0 644

சந்தானத்தை துணைக்கு வைத்துக் கொண்டு காமெடி ஹீரோ வேஷம் கட்டிக் கொண்டிருந்த உதயநிதி முதல்முறையாக ஆக்‌ஷன் பக்கமும் எட்டிப் பார்ப்போமே என்கிற துணிவோடு களமிறங்கியிருக்கும் படம் தான் இந்த ‘கெத்து’.

அப்பா உடற்பயிற்சி வாத்தியாராக வேலை பார்க்கும் பள்ளிக்கு எதிரே அண்ணனோடு சேர்ந்து கொண்டு ஒரு டாஸ்மாக் கடையை ஆரம்பிக்கிறார் வில்லன் மைம்கோபி.

அங்கு குடிப்பவனெல்லாம் பள்ளிக்கூட காம்பவுண்ட்டுக்குள் வாந்தியெடுத்து கிடக்க, கடையை அகற்றச் சொல்லி சத்யராஜ் தரப்பிலிருந்து போலீசுக்கு புகார் போகிறது.

இதற்கிடையே காசுக்காக தீர்த்துக் கட்டுகிற வேலையைச் செய்யும் தீவிரவாதி(?) விக்ராந்த்துக்கு ஒரு விஞ்ஞானியை கொலை செய்யச் சொல்லி உத்தரவு வருகிறது. அதை நிறைவேற்றும் பொருட்டு சத்யராஜ் இருக்கும் ஊரான குமுளிக்கு வருகிறார்.

சத்யராஜூக்கும், மைம்கோபிக்கும் மோதல் முற்றிய நிலையில் அடுத்தநாள் மைம்கோபி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். கொலைப்பழி சத்யராஜ் மீது விழ, செய்யாத கொலைக் குற்றத்திலிருந்து அப்பா சத்யராஜை மகன் உதயநிதி எப்படி மீட்டுக் கொண்டு வருகிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

முந்தைய படங்களை கம்பேர் செய்யும் போது டான்ஸ், ஆக்டிங்கோடு கூடுதலாக ஆக்‌ஷனிலும் பாஸ்மார்க் வாங்குகிறார் உதயநிதி. அப்படி இருந்தும் முகத்தில் தெரிகிற குழந்தைத் தனம் மாறாமல் இருப்பது தான் ‘அய்யோ பாவம்’ என்றாகிறது.

சுகுமாரின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில் கலர்ஃபுல்லாகத் தெரியும் எமி ஜாக்சன், இதர காட்சிகளில் ‘ப்ப்பா… யார்ரா இந்தப் பொண்ணு… என்று ரசிகர்களை கதற விடுகிறார். அதிலும் சவீதாவின் பின்னணிக்குரலில் லீப் மூவ்மெண்ட் கொடுக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார். சில காட்சிகளில் குறும்புத்தனம் செய்கிறேன் பேர்வழி செய்யும் எக்ஸ்பிரசன்கள் அடங்கப்பா…? எதுக்கு சம்பளமும் கொடுத்து சரியாக லிப் மூவ்மெண்ட்டும் கொடுக்க முடியாத ஒருவரை நடிக்க சொல்லி கஷ்டப்பட வேண்டும் என்று தெரியவில்லை.

பொறுப்புள்ள, ஜாலியான அப்பா, டீசண்ட்டான உடற்பயிற்சி ஆசிரியர் என மிதமான நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சத்யராஜ்.

ராஜேஷ் ஏதோ பழைய படங்களில் கெட்டப் போட்டது போல வருகிறார், உதயநிதியின் நண்பராக வரும் கருணாகரன் காமெடி செய்வதை விட கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் தப்பிக்கிறார்.

தீவிரவாதியாக வரும் விக்ராந்த் படத்தின் எந்த சீனிலும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. அமைதியாக வருகிறார்… வலது, இடது, கீழே, மேலே என எல்லா திசைகளிலும் கோபமாகப் பார்க்கிறார். நேராகப் பார்த்து துப்பாக்கியை குறி வைக்கிறார்…. கிளைமாக்ஸில் எதிர்பார்த்தபடியே உதயநிதியிடம் சண்டைப்போட்டு தோற்றுப் போகிறார். விக்ராந்த்தை பயன்படுத்த வேண்டிய ‘அளவு’ நன்றாகத் தெரிந்திருக்கிறது. அந்த அளவுக்குள்ளாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சுகுமாரின் ஒளிப்பதிவில் இவ்வளவு பச்சை பசேல் என்கிற ‘குமுளி’யைப் பார்ப்பது ஆச்சரியம் தான். அதே சமயத்தில் எதற்கெடுத்தாலும் மரத்தில் தொங்கிக் கொண்டு கேமராவை டாப் ஆங்கிளில் வைப்பது பழக்க தோஷத்தை அடுத்தடுத்த படங்களில் விட்டொழிப்பது நல்லது.

ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் ‘தில்லு முல்லு’, ‘தேன் காற்று’ பாடல்கள் ரிப்பீட்டஸ் ட்யூன்ஸ்! பின்னணி இசையில் ரிலீஸ் அவசரம் அப்பட்டமாகத் தெரிகிறது. இப்படி பின்னணி போடவா ஓவரா…. டைம் எடுத்துக்கிறீங்க ஹாரீஸ்?

உதயநிதி இந்த ஆக்‌ஷன் ஏரியாவுக்கு பழக்கமில்லாதவர் என்பதால் அவராலும் ஒரு லெவலுக்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை.

டெக்னிக்கலா நல்ல சவுண்ட்டு உள்ள ஆளாகத் தெரிகிறார் இயக்குநர் திருக்குமரன். ஆனா படத்தோட வசூலுக்கு அது மட்டுமே போதுமாங்கிறது அவருக்கே வெளிச்சம். ‘மான் கராத்தே’வைப் போலவே இதிலும் தொழில்நுட்ப விஷயங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தியவர் கதை, திரைக்கதை, வசனம் போன்ற இடங்களில் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டிருக்கிறார்.

0 673

இளையராஜா – பாலா – சசிகுமார் மூவர் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் ரிலீசாகியிருக்கும் படம்.

பாலாவின் படங்களுக்கென்றே ரெகுலரான ‘கலர்’ உண்டு. அதீத வன்முறை, குரூர புத்தி, ரத்தம் தெறிக்க தெறிக்க சங்கை அறுப்பது, அல்லது கடித்துக் குதறுவது என்கிற சிகப்புக் கலர் அது.

‘நான் கடவுள்’ படத்தில் தாங்கக் கூடிய அளவுக்கு காட்டியவர் இதில் இரண்டாம் பாதியில் ஈரக்குலையே நடுங்கிப் போகிற அளவுக்கு திகட்ட திகட்ட வன்முறை வெறியாட்டம் ஆடியிருக்கிறார்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கரகாட்டக்கலையை பெருமைப்படுத்தும் விதமாக படத்தை எடுத்து வைத்திருப்பார். மணக்க மணக்க ரசித்து விட்டு வரலாம் என்கிற எண்ணத்தோடு தியேட்டருக்கு போகிற ரசிகனை ரத்தச் சகதியில் குளிக்க வைத்து தலை துவட்டி அனுப்புகிறார்கள்.

முதல் பாதி பரவாயில்லை என்கிற மனநிலையில் இருக்கிற ரசிகனை இரண்டாம் பாதியில் ”இனிமே என் படத்தைப் பார்க்க வருவியா… வருவியா…” என்கிற கொலை வெறியோடு சீனுக்கு சீனுக்கு குத்திக் கிழிக்கிறார்.

தஞ்சாவூரில் பிரபலமான இசைக்கலைஞராக இருக்கும் ஜி.எம்.குமாரின் மகன் நாயகன் சசிகுமார். இவர் ஒரு கரகாட்டக்குழுவை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அதே குழுவில் கரகாட்டக்காரியாக இருப்பவர் நாயகி வரலட்சுமி.

”ஏய்ய்ய்… மாமோய்…” என்கிற வார்த்தை தான் அவளுக்கு சகலமும். ”ஏ… மாமன் பசி ஆறணும்னா நான் அம்மணமாக்கூட ஆடுவேன்” என்று சொல்கிற அளவுக்கு நெஞ்சு முழுக்க சசி மீது காதல்.

அவளை பெண் கேட்டு வருகிறார் அப்பாவி வேஷம் போடும் புதுமுகம் தயாரிப்பாளர் சுரேஷ். சசிகுமாரும் வரலட்சுமியின் வாழ்க்கை நன்றாக இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் அவருக்கே முன் நின்று திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

திருமணமான கையோடு காணாமல் போன வரலட்சுமி என்ன ஆனார்? என்கிற கேள்வி ரசிகனுக்கு வருகிற நேரத்தில் அவரைத் தேடிப்போகிறார் சசிகுமார்.

அதன்பிறகு வருகிற காட்சிகள் அனைத்தும் வன்முறையின் உச்சம்! பீதியில் தலையை குணிந்து கொண்டு மொபைலில் டெம்பிள் ரன்னையோ, ஆங்கிரி பேட்டையே விளையாட ஆரம்பித்து விடுகிறான் ரசிகன்.

தலைவிரி கோலமாக வருகிறார் சசிகுமார். இரண்டாம் பாதியில் ‘நான் கடவுள்’ ஆர்யா ஸ்டைலில் ஒரு பைட் சீனில் மிரட்டும் வேகம். கரகாட்டக்குழுவை நடத்த அவர் படும் பாட்டை பார்க்கும் போது ரசிகர்களிடம் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

இதற்கு மேல் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற ரேஞ்சில் கரகாட்டக்காரியாக வரும் வரலட்சுமி, ஆடுவதில் மட்டுமல்ல… தன்னை தப்பான எண்ணத்தோடு தொட வருகிற ஆண்களுக்கும் கொடுக்கிற அடி ஒவ்வொன்றும் இடி தான்.

கரகாட்ட சீனைக் காட்டும் போதெல்லாம் மறக்காமல் வரலட்சுமியின் தொப்புளை ஸ்க்ரீன் முழுவதிலும் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். மற்றபடி சிலாகித்துச் சொல்ல ஒன்றுமில்லை.

வில்லனாக வருகிற தயாரிப்பாளர் சுரேஷூக்கு இரண்டு விதமான கேரக்டர்கள். முதலில் அப்பாவி போல அடங்கி வரலட்சுமியை கைபிடிக்க துரத்துவதும், கழுத்தில் தாலி கட்டி முதலிரவு அறைக்குள் கூட்டிச் சென்றவுடன் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பிப்பதுமாக ஆக்டிங்கில் அப்ளாஸ் வாங்குகிறார்.

திறமை இருக்கும் இடத்தில் கொஞ்சம் திமிர் இருப்பது இயற்கை தான். ஆனால் ஜி.எம்.குமாரோ எப்போதுமே திமிர்த்தனத்துடன் தான் கத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய திறமைக்கு ஒரு ஒரு பாடலை போட்டு அத்தோடு ஓரங்கட்டி விடுகிறார்கள்.

வரலட்சுமியுடன் கரகாட்டக்காரிகளாக வரும் சக நடிகைகள் ஆடுகிற ஆட்டத்தில் சகலமும் குலுங்குகிறது. ஆனால் யார் ரசிப்பது..?

இந்த வன்முறைகளுக்கு நடுவே இசைஞானியின் பின்னணி இசையும் பாடல்களும் தான் படம் பார்க்கப்போகிற ரசிகனுக்கு ஒரே ஒரு ஆறுதல்!

காது கேட்கக் கூசும் கெட்ட வார்த்தைகள் வசனங்களாக படத்தில் ஆங்காங்கே சர்வசாதரணமாக ஒலிக்கிறது.

பெண்களும், குழந்தைகளும் தியேட்டர்களுக்கே வருவதில்லை என்று குறைபட்டுக் கொள்கிற தயாரிப்பாளர்கள் தான் இந்தமாதிரி அபத்தங்களையும் தயாரிக்க முன் வருகிறார்கள்.

இப்படிப்பட்ட படங்களை எடுத்தால் எப்படி பெண்கள் கூட்டம் தியேட்டர் பக்கம் வருவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கரகாட்டக்கலைஞர்களின் வலிகளையும், வேதனைகளையும் காட்ட நினைத்த பாலா இரண்டாம் பாதியில் அதிலிருந்து விலகி தனது வழக்கமான பாதையில் பயணிப்பது தான் வேதனையிலும் வேதனை. அந்த வகையில் நட்சத்திரங்களிடம் நடிப்பை பிழிந்தெடுத்தது மட்டுமே புதுசு. மத்ததெல்லாம் பாலாவின் பழைய ‘டச்’ தான்.

0 715

பெரும் செல்வந்தரான ராதாரவியின் மூத்த மகள் நாயகி நிகிஷா. இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். நிகிஷாவின் தங்கை கணேஷ் என்பவரை காதலித்து வருகிறார். இந்த விஷயம் ராதாரவிக்கு தெரிய வருகிறது. ராதாரவி கணேஷை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார்.

ராதாரவி திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார் என்று நினைத்து நிகிஷா தன் தங்கையை காதலனுடன் திருமணம் செய்து வைக்கிறார். சில நாட்களில் ராதாரவி இறக்கிறார். அதைத்தொடர்ந்து நிகிஷாவின் தங்கையும் அவருக்கு பிறந்த குழந்தையும் இறக்கிறார்கள்.

இதனால் சோகத்தில் இருக்கும் நிகிஷா, தன் தோழி இனியாவின் அறிவுரைப்படி கரையோரத்தில் உள்ள பங்களாவில் தங்குகிறார். இந்த பங்களாவிற்கு அருகில் தனிமையில் தங்கியிருக்கும் வஷிஸ்டா என்பவருடன் நிகிஷாவிற்கு பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

ஒருநாள் வஷிஸ்டா, நிகிஷாவை ஒரு இடத்திற்கு வரச் சொல்லுகிறார். அங்கு செல்லும் நிகிஷாவிற்கு வஷிஸ்டா இறந்து பத்து வருடங்கள் ஆகிறது என்பது தெரிகிறது. இதனால் அதிர்ந்து போகிறார் நிகிஷா.

வஷிஸ்டா இறந்தவன் என்றால் தன்னுடன் பேசுவது யார் என்று குழப்பத்தில் இருக்கிறார் நிகிஷா. இந்த விஷயத்தை தன் தோழி இனியாவிடம் சொல்ல, இருவரும் போலீஸை நாடுகிறார்கள். போலீஸ்காரர்களும் வஷிஸ்டா இறந்து பத்து வருடங்கள் ஆகிறது என்பதை உறுதிபடுத்துகிறார்கள்.

இதனால் குழப்பமடையும் நிகிஷாவை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இனியா சிகிச்சையளிக்கிறார். இருந்தாலும், வஷிஸ்டாவுடன் பேசும் வாய்ப்பு நிகிஷாவிற்கு ஏற்படுகிறது.

உண்மையில் அந்த வஷிஸ்டா யார்? அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? நிகிஷாவை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் நிகிஷாவை சுற்றியே காட்சிகள் நகர்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அதே நேரத்தில் கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இனியா, பாசமிகு தோழியாகவும், கிளைமாக்சில் மாறுபட்ட நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே வந்து ரசிகர்களிடம் அப்லாஸ் பெற்றிருக்கிறார் சிம்ரன். ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

ஒரு ஹீரோவுக்கு நிகராக இவருடைய கதாபாத்திரத்தையும் காட்சியமைப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள். கணேஷ், வஷிஸ்டா என இரண்டு கதாநாயகன்கள் நடித்திருக்கிறார்கள். இருவரும் கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்.

கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீஷ் குமார். இதில் முதல் பாதியை கிளாமராகவும், பிற்பாதியை திரில்லராகவும் உருவாக்கியிருக்கிறார். இதில் முதல் பாதியை விட இரண்டாம் பாதியே ரசிக்க முடிகிறது.

சுஜித் ஷெட்டியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெய் ஆனந்தின் ஒளிப்பதிவு ரசிக்கும் படியும் உள்ளது.

மொத்தத்தில் ‘கரையோரம்’ அனைவரையும் கவரும் படம்.

0 715

போலி என்கவுண்டர் செய்யும் போலீஸ், அதை உண்மையிலேயே யாருக்காக செய்கின்றது என்பது தான் இந்த படத்தின் கதை. சமூகம் மீது உள்ள அக்கறையில் அல்ல, பெரும் புள்ளிகள் காப்பாற்ற பட வேண்டும் என்ற பின்னணியில் தான் போலியாக என்கவுண்டர்கள் நடத்தப்படுகின்றது என்பதை தான் தலையை சுற்றி மூக்கை தொட்டுள்ளார் இயக்குனர்.

படத்தின் மையக் கதையை விட்டு விட்டு படத்திற்கு தேவையில்லாத விஷயங்களாகவே வலுகட்டாயமாக திணித்து எடுத்துள்ளனர். அதிலும் கதை எதை நோக்கி போகிறது என இன்டர்வெல் வரை யாருக்கும் புரியவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரமே சமுத்திரக் கனி தான். கதாநாயகனை படத்தின் கிளை மேக்ஸ் காட்சியில் அறிமுகம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது சமுத்திரக்கனி இன்டர்வெல்லிற்கு பிறகு வருவது. ளை

சமுத்திரகனி என்றாலே கருத்து சொல்லவருபர் என்று தமிழ் சினிமாவில் நினைத்து விட்டார்கள் அதை நல்ல படத்தில் செய்ய வையுங்கள் என்ன கதை என்ன சொல்லவரும் என்பதை மறந்து எதை நோக்கி போகிறது என்பது யாருக்கும் தெரியாமல் படம் எடுத்துள்ளார் இயக்குனர் ,

படத்தில் ஒரு நல்ல கருத்தை விட்டு விட்டு தேவையில்லாத காதல் காட்சிகளை வலுகட்டயமாக திணித்ததால் புதியதாக சொல்ல வேண்டிய விஷயத்தை கோட்டைவிட்டு விட்டார் இயக்குனர். சக்தி காக்கிசட்டை போட்டதை பார்த்த யாரோ, ‘நீங்கள் மங்காத்தா அஜித் போல இருக்கீங்க’ என கூறிவிட்டார் போல. அச்சு பிசகாமல் அஜித்தின் பாணிகளை காப்பி செய்துவிட்டு நானும் போலீஸ் தான் என ஆர்வ கோளாறாக வலம் வந்துள்ளார்.

மொத்தத்தில் படம் பார்க்கும்போது தற்காப்பாக இருப்பது நல்லது.

0 891

சுமாரான பையன் எப்பவுமே சூப்பரான பெண்ணை தேடி அலைவது சகஜம்தான். ஆனால் சுமாரா இருக்குற பையனுக்கு சூப்பரான பெண் விரும்பியோ விரும்பாமலோ மனைவியாக அமைந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா. மாலை நேரத்து மயக்கம் படத்தை பாருங்க.

நாயகன் பிரபு (பாலகிருஷ்ணா) அப்பா பிள்ளை. அவரின் பேச்சை கேட்டே வளர்ந்த இவர் காதலுக்காக ஏங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலி கிடைக்காமல் அப்பா (அழகம் பெருமாள்) பார்த்த பெண்ணான மனோஜிதாவை (வாமிகா) மணக்கிறார்.

வாமிகாவோ டோட்டல் மாடர்ன். நிறைய ஆண் நண்பர்களை கொண்டவர். கணவன், மனைவியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் செக்ஸ்க்கு தடை போடுகிறார் வாமிகா. இதனால் ஒருமுறை பலவந்தமாக உறவு கொள்ளும் நாயகனை விட்டு பிரிந்து செல்கிறார் வாமிகா. விவாகரத்து வரை சென்ற இவர்களது வாழ்க்கை பின்னர் என்ன ஆனது? மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் கதை.

அறிமுக இயக்குநராக கீதாஞ்சலி செல்வராகவன் தமிழ்சினிமாவிற்கு கிடைத்துள்ளார். அதுமட்டுமின்றி செல்வராகவன் கதை என்பதால் அதனை கொஞ்சமும் கெடுக்காமல் கதைக்கு உயிர் கொடுத்து திரையில் காட்டியிருப்பது அருமை. வெல்கம் மேடம்…

இசை அம்ரித்தின் மாலை நேரத்து மயக்கம் என்ற பாடல் படத்தின் ஹைலைட். பின்னணி இசையிலும் பட்டைய கிளப்பியிருக்கிறார் இவர். ஒளிப்பதிவு ஸ்ரீதரின் அற்புதமான காட்சிகள் கண்களுக்கு விருந்தாகியுள்ளது.

மொத்தத்தில் மாலை நேரத்து மயக்கம் தமிழ்சினிமாவில் அழிக்க முடியாத சிற்பம்

0 728

குழந்தைகளை வைத்து வெளிவந்துள்ள வித்தியாசமான படங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு விதமான குழந்தை பாசம். ஆண் குழந்தை தான் வேண்டும் என மூன்று பெண் குழந்தை பெற்ற பிறகும் பிடிவாதம் பிடிக்கும் தந்தை. ஏதோவொரு ஆர்வத்தில் நடந்த தவறால் குழந்தையை வயிற்றில் சுமக்கும் கல்யாணமாகாத இளம் பெண். பெற்ற குழந்தை போரின்போது பலியானதை தாங்க முடியாமல் மனவேதனையில் இருக்கும் இலங்கை பெண். குழந்தை பாக்கியம் கிடைக்காத மனைவி. பிறந்தது முதலே யாரும் இல்ல அனாதையாய் வளரும் சிறுவன். பெற்றோர்கள் விவாகரத்து கேட்பதை நினைத்து கலங்கும் மகன். இவர்களை வைத்து தான் இந்த படத்தின் கதையே நகர்கின்றது. இறுதியில் இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து கதையை முடித்திருப்பது கணக் கச்சிதம்.

ஒரு குழந்தை பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தால் மகாராணியாக வாழலாம் என படம் பார்க்கும் நம்மை நெகிழ வைத்துள்ளார் இயக்குனர். எத்தனையோ பேர் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் அதே வேளையில் பல குழந்தைகள் அனாதையாக்கப்பட்டு தூக்கியெறியப்படுகிறது. கோவில் குளம் என சுற்றமால் அனாதை இல்லங்களை சுற்றினாலே போதும் என ஒற்றை வரியில் ஆணியடித்தார்போல் கூறியுள்ளார் இயக்குனர்.

படத்திற்கு முக்கிய பலம், கருணாஸ், ரித்விகா, கிரிஷா. கருணாஸ் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிக தத்ரூபமாக உள்ளது. பெண் குழந்தையை தூக்கிவீசய மனைவியை அடித்து உதைக்கும் போது நமக்கே வலிக்கின்றது. அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கருணாஸ். மேலும் ரித்விகா சில காட்சிகள் வந்தாலும் மனதில் தங்கி விடுகின்றார். புதுமுகமாக அறிமுகமாகியுள்ள கிரிஷா மிக சிறப்பாக நடித்துள்ளார்.

ஐந்து குழந்தைகள் புதுமுகங்களாக படத்தில் வளம் வருகிறார்கள் அவர்களின் லூட்டி படத்துக்கு மேலும் பலம்

படம் நீளமாக உள்ளதோ என நினைபவர்கள் கூட கிளைமாக்ஸ்யை பார்த்ததும் ஒரு முழுத்திருப்தியுடன் வெளியே வருவார்கள். இசையமைப்பாளர் தான் படத்தில் சிறந்த பாடல்களை தந்துள்ளார் . மற்ற படி படம் குடும்பத்தினரை முழுக்க முழுக்க திருப்தி படுத்தும். தொடர்ந்து இது போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தர வேண்டும் என நீயா நானா ஆண்டனி மற்றும் இயக்குனர் சார்லஸிற்கும் ஒரு வேண்டுகோள்.

மொத்தத்தில் இப்படம் ஒரு குழந்தை குடிசையாக இருந்தாலும், மாளிகையாக இருந்தாலும் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தால் மகாராணியாக வாழலாம் என உணர்த்துகிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் மிக சிறந்த படம் இல்லை பாடம் என்றுதான் சொல்லனும் இயக்குனரும் தயாரிப்பாளரை எப்படி பாராட்டுவது என்பது தெரியவில்லை

0 711

வட சென்னையில் உள்ள இரண்டு பாக்சிங் குழுக்கள் இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரையும் நாட்டு வைத்தியர் ராமசாமி பரம்பரையும்

நாட்டு வைத்தியர் பரம்பரையில் வந்த முனுசாமியை (பெசன்ட் நகர் ரவி ) இரும்பு மனிதர் பரம்பரையில் வந்த ஒருவர் பாக்ஸிங்கில் தோற்கடிக்க, அவமானம் தங்காத முனுசாமி தற்கொலை செய்து கொள்கிறார் . அவரது மகனான சிறுவன் பூலோகம் அனாதையாகிறான் .

அப்பாவைத் தோற்கடித்த இரும்பு மனிதர் பரம்பரையில் அடுத்து உருவாகும் குத்துச் சண்டை வீரனை தோற்கடித்து அவமானத்தைத் துடைக்க வேண்டுமே என்ற வெறியுடனே குத்துச்சண்டை கற்று வளர்ந்து இளைஞன் ஆகிறான் பூலோகம் (ஜெயம் ரவி )

ரத்தினம்(பொன்வண்ணன்) பூலோகத்தின் குத்துச் சண்டை குரு. ஓட்டல் நடத்தும் சிந்து (திரிஷா) பூலோகத்தின் காதலி.. நண்பன் ஆலயமணி (சாம்ஸ்)

பூலோகத்தின் தந்தை முனுசாமியை தோற்கடித்தவரின் மகன் ஆறுமுகம் (ஐ.எஸ்.ராஜேஷ்) இரும்பு மனிதர் பரம்பரையில் அடுத்த குத்துச் சண்டை வீரனாக வருகிறான் . அவனது குரு பாண்டியன் (சண்முகராஜன் )

இந்த நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் அதிபரான தீபக் ஷாவுக்கு (பிரகாஷ் ராஜ்) ‘ஏதாவது வித்தியாசமான நிகழ்ச்சி நடத்தி தன் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை பிரம்மாண்டமாக உயர்த்த வேண்டும் என்ற ஆவேசம். அதன் மூலம் மக்களிடம் இருந்தும் விளம்பர நிறுவனங்கள் மூலமும் கோடி கோடியாக சம்பாதித்து உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவனாக உயர வேண்டும் என்ற பேராசை .தனது சேனலை உலக அளவிலும் கடைவிரிக்கச் செய்யவேண்டும்’ என்பது தீபக் ஷாவின் பண வெறி .

தீபக் ஷாவுக்கு வட சென்னையின் குத்துச் சண்டைக் கலாச்சாரம் தெரிய வர , அந்தப் போட்டியை மக்களின் வெறி உணர்சியையும் தூண்டும் வகையில் பிரபலப்படுத்தி அதன் மூலம் விளம்பர நிறுவனங்களை ஈர்த்து பணம் அறுவடை செய்ய திட்டமிடுகிறான் ..

இந்த போட்டியில் வெற்றி பெறுபவன் இந்தியாவின் குத்துச் சண்டை சாம்பியனான குரு தயாள் (அர்பித் ரங்கா) உடன் மோதுவான் என்று அடுத்த போட்டியை அறிவித்து வியாபாரத்தை வளர்த்துக் கொண்டு பணத்தில் கொழிக்கிறான் அவன்.. ஒரு அறிமுக நிகழ்ச்சியில் குருதயாளையும் பூலோகம் அவமானப்படுத்துகிறான் . கொந்தளித்த குரு தயாள் ஆறுமுகத்திடம் பூலோகத்தை உன் கையால் கொன்னுட்டு வெட்டி வீரனா என்னுடன் மோத வா” என்று சொல்கிறான் .

ஆறுமுகத்தை தோற்கடிப்பது மட்டுமின்றி மேடையிலேயே அடித்துக் கொல்லும் வெறியில் பூலோகம் இருப்பதை அறிந்த ஆறுமுகத்தின் மனைவி ஸ்டெல்லா, பூலோகத்திடம் வந்து கெஞ்சியும், தனது கொலை முடிவில் உறுதியாக இருக்கிறான் பூலோகம்.

போட்டியில் பூலோகம் வெல்கிறான். அவன் அடித்த அடியில் ஆறுமுகம் சாகவிட்டாலும் உயிராபத்துக்கு உள்ளாகி படுத்த படுக்கையாகிறான். .

ஆறுமுகம் இறந்தால் அவன் பிள்ளையும் சிறுவயதில் தன்னைப் போலவே அனாதாயாகும் என்பது பூலோகத்துக்கு அப்போதுதான் புரிகிறது . வெறி தணிகிறது . ஆறுமுகத்தின் நிலைமைக்கு தான்தான் காரணம் என்பதை உணரும் பூலோகம், குத்துச் சண்டையில் இருந்தே விலகுகிறான் . மூட்டை தூக்கும் வேலை , ஹோட்டல் வேலை , கல்லூரிக் கேண்டீன் சர்வர் வேலை எல்லாம் செய்து பணம் திரட்டி ஆறுமுகத்தின் சிகிச்சைக்கு உதவுகிறான் .

பூலோகம் விலகிக் கொண்டதால் போட்டி தடைபட, தொலைக்காட்சி அதிபர் தீபக் ஷாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு, வருவாய் வரும் வழி தடைபடும் என்ற நிலை . அவன் பூலோகம் மீது கொலை வெறியாகிறான்.பூலோகத்தை மீண்டும் மேடைக்கு கொண்டு வந்து வீழ்த்த வேண்டும் என்று குருதயாளும் துடிக்கிறான் .

இருவரும் திட்டமிட்டு வலை விரித்து பூலோகத்தை சீண்டி அவனை மேடை ஏற்றுகிறார்கள். மேடையில் பூலோகம் வென்றாலும் சென்சேஷனலுக்காக குருதயாள் வென்றதாக அறிவிக்க வைக்கிறான் தீபக் ஷா .

குரு தயாள் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும்போதுதான் அவனது தலையில் பேரிடி விழுகிறது .

மேலும் இந்தப் போட்டியை வளர்த்து மேலும் உலக அளவில் தனது தொலைக்காட்சியை ஒளிபரப்பி பிரபலமாக்கி டாலரிலும் ஈரோவிலும் பணம் அள்ள நினைக்கும் தீபக் ஷா ஒரு முடிவெடுக்கிறான் .

அந்த முடிவு குரு தயாளையும் அவனது குடும்பத்தையுமே குலை நடுங்க வைக்கிறது. அப்புறம் என்ன நடந்தது என்பதே,

ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ரவி, திரிஷா , பிரகாஷ் ராஜ் நடிப்பில் மக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் வசனத்தில் கதை திரைக்கதை எழுதி கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருக்கும் பூலோகம் ..

தொலைக்காட்சி ஒளிபரப்புகள் வருவதற்கு முன்பு விளையாட்டுகள் கம்பீரமாக இருந்தன. விளையாடுபவர்கள் வீரர்களாக இருந்தனர். ஆனால் இந்த ஒளிபரப்புக் கண்ணிக்குள் சிக்கிய பிறகு விளையாட்டுகள் எல்லாம் சர்க்கஸ் ஆகிப் போயின . வீரர்கள் எல்லாம் கோமாளி ஆகிப் போனார்கள்.

அந்த போட்டிகளின் விளம்பரத்தில் காட்டப்படும் பொருட்கள் மக்களின் மூளைக்கும் திணிக்கப்படுவதால், அதில் நாம் இழக்கும் பணம் , அழியும் மண்ணின் மைந்தர்களின் வியாபாரம்…..

இப்படி இந்தப் படம் பேசும் விசயங்கள் பாராட்டி வாழ்த்தி போற்றி வணங்குதலுக்குரியவை .

இப்படி நாம் இந்தப் படத்தைக் கொண்டாடும் அளவுக்கு உயர்த்தி விதத்தில் ஆகப் பெரும்பங்கு, வசனம் எழுதி இருக்கும் மக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதனுக்குப் போகிறது .

“ ஒரு கிரீமை கொடுத்து இதை பூசிக்கிட்டா சிவப்பாகலாம் னு சொல்வீங்க . ஆமா…. எங்க அப்பன் கருப்பு… ஆத்தா கருப்பு . எங்க ஜனங்களும் கருப்பு. நான் ஏன் சிவப்பாகணும்? ?’’

-என்ற ஒரு படச் சோற்றுக்கு ஒரு வசன பதம் போதும், இந்தப் படம் நம்ம சமூகத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்த!

தலை தாழ்த்துகிறோம் தோழர் !

அடுத்து ஜெயம் ரவி . இந்தப் படத்துக்காக போட்டிருக்கும் உழைப்பு பிரம்மாண்டப் பிரம்மாதமானது

நிஜமான குத்துச் சண்டை வீரனுக்கான உடம்பைக் கட்டியமைத்ததாகட்டும்… வட சென்னைக் குத்துச் சண்டை வீரனின் உடல் மொழிகளை நடனம் மற்றும் இயல்பில் கைக்கொண்டதாகட்டும்… உதடுகளால் அல்லாமல் மொத்த உடலாலும் வசனங்களை உணர்ந்து பேசியதாகட்டும்…. அற்புதம் ரவி .

வாழ்த்துகள் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் !

இவ்வளவு விஷயங்கள் பேசும் படத்தை பிரச்சார நெடிக்குள் முக்கி எடுக்காமல் பரபரப்பான வேகமான திரைக்கதை, வட சென்னை பாக்ஸிங் வரலாறு, கிளாமர் காதல் , செண்டிமெண்ட், மண் தன்மை இவற்றை சிறப்பாகக் கலந்து மேக்கிங்கிலும் அசத்தி இருப்பதற்காக !

சும்மா ‘பூலோகம் மேடை ஏறினான் கோடம்பாக்க சினிமா விதிகளின்படி பாக்ஸிங்கில் அடித்து வீழ்த்தினான்’ என்று இல்லாமல் பூலோகத்துக்கு பாரம்பரிய முறைப்படி பாண்டியன் பயிற்சி கொடுக்கும் காட்சிகளும் , விஞ்ஞான முறைப்படி சிந்து தரும் பயிற்சி உபகரணங்கள் பற்றிய காட்சிகளும் … மேற்கத்திய விஞ்ஞானத்தை பாரம்பரிய விஞ்ஞானம் மிஞ்சும் காட்சிகளும் …

இந்தப் படததுக்காக கல்யாண கிருஷ்ணன் பாக்ஸிங் பற்றிய ஓர் ஆராய்ச்சியே நடத்தி இருப்பது புரியும்போது மனதின் விழிகள் விரிகின்றன.

ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸைஸ்டீவன் ஜார்ஜ் என்ற கேரக்டரில் இறக்கி அவரை சாவுக் குத்தாட்டம் ஆட வைப்பது போன்ற காட்சிகளில் ‘கமர்ஷியல் கண்மணி’யாகவும் விகசிக்கிறார் கல்யாண கிருஷ்ணன் .

கதாபாத்திரங்களின் கெட்டப் செட்டப் எல்லாம் சரியாக இருந்தாலும் பின்னணியில் வட சென்னை வரவே இல்லை. மசானக் கொள்ளை காட்சி வந்துதான் கொஞ்சமாக நம்ப வைக்கிறது .

குத்துச் சண்டையில் ஊறிய பூலோகம்… ஸ்டெல்லா கெஞ்சிய போதும் ‘போடி’ என்று திட்டி விரட்டிய பூலோகம்…

ஆறுமுகம் உயிராபத்துக்கு ஆளான போது மட்டும் ஃபாஸ்ட் கட்டிங்கில், ஞானோதயம் பெற்று கூலி வேலைக்கும் காட்சிகள் எல்லாம், சொல்லப்பட்ட விதத்தில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது

முகத்தைத் தவிர வேறு எங்கும் அடிக்காத கண்ணியத்தால் உலகளாவிய குத்துச் சண்டையை விட மேன்மையானது வடசென்னைக் குத்துச் சண்டைக் கலாச்சாரம் என்று ஆரம்பத்தில் கெத்து காட்டிவிட்டு , கிளைமாக்சில் அதை மீறுவது நியாயமா?

இப்படி சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் …

பூலோகம் மீதான மரியாதையை மனதுக்குள் ஆகாயமாக விரிகிறது