Home Movie Reviews

0 770

புதுசா எதையாவது முயற்சி பண்ணப் போய் எசகு பிசகாக மாட்டிக்கொள்கிற ரகமாகத் தான் ‘தாரைதப்பட்டை’யில் ஆகி விட்டிருந்தார் சசிகுமார்.

நல்ல வேளையாக அறிமுக இயக்குநர் வசந்தமணி மீண்டும் அவரை அவருக்கான ரூட்டிலேயே கூட்டி வந்து விட்டுருக்கிறார்.

என்ன இதில் கொஞ்சம் ஓப்பனிங் சாங் பில்டப், உட்பட சில மாற்றங்களை மட்டுமே செய்து அக்மார்க் சசிகுமாரின் படமாகவே வந்திருக்கிறது இந்த ‘வெற்றிவேல்’.

ஊரில் படிக்காமல் உரக்கடை வைத்திருக்கும் சசிக்கு அதே ஊரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் படிக்க வரும் மியா ஜார்ஜை பார்த்தவுடன் காதல் வருகிறது.

விவசாயம் சம்பந்தமாக டவுட்டுகளை கேட்கப் போகிறேன் கல்லூரிக்குள் நுழைகிறவர் அடுத்தடுத்து பால்களைப் போட்டு மியாவின் காதலை வாங்கி விடுகிறார்.

”அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதை பார்க்கப் போகிறேன். வருவதற்கு பத்து நாட்கள் ஆகும்” என்று சொல்லி விட்டுப் போகிறார் மியா ஜார்ஜ்.

அந்த இடைவெளியில் சசி தன் தம்பியின் காதலுக்கு உதவப்போய் ஆரம்பமாகிறது பிரச்சனை?

அதே ‘நாடோடிகள்’ கோஷ்டியை களமிறக்கி தம்பி காதலிக்கும் பெண்ணை கடத்தச் சொல்ல, பெண் மாறிப்போகிறார்.

”இன்னும் மூணு நாள்ல எனக்கு கல்யாணம். என்னை ஊர்ல என்ன நெனைப்பாங்க?” என்று பரிதாபத்தோடு கேட்கிறார் கடத்தப்படும் இன்னொரு நாயகி நிகிலா.

தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக அவளையே திருமணம் செய்ய வேண்டிய நிலை சசிகுமாருக்கு! பத்து நாட்கள் கழித்து திரும்பி வரும் மியா ஜார்ஜ் சசியின் ப்ளாஸ்பேக்கை கேட்டு கண்களில் கண்ணீரோடு நிற்கிறார். மியாவின் காதல் என்னவானது? திட்டமிட்டபடி சசிகுமார் தம்பியின் காதல் நிறைவேறியதா? என்பதே கிளைமாக்ஸ்.

படம் முழுக்க ‘தேவர் மகன்’ படத்தின் வாடை வீசுவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் தனது நேர்த்தியான திரைக்கதையால் சரி விடுங்க… என்று ரசிகர்களை சமாதானம் சொல்லிக்கொள்ள வைத்து விடுகிறார் இயக்குநர்.

‘வெற்றிவேல்’ ஆக வரும் சசி வேட்டி, சட்டையில் கன கச்சிதம். ரஜினி லெவலுக்கு ஓப்பனிங் சாங் வைத்து பில்டப்பெல்லாம் கொடுத்தாலும் வில்லனிடம் வாங்கிக் கட்டுகிற காட்சிகளில் கதைக்காக கொஞ்சம் ஹீரோவுக்கான கெத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

அவரது காதலியாக வரும் மியா ஜார்ஜ் கேரள பெண்ணாகவே படத்திலும் வருகிறார். ”முத்தல் முகம்” அப்பட்டமாக ஸ்க்ரீனில் தெரிந்தாலும், சசிக்கு காதலி என்பதால் மன்னித்து விடலாம். பட் அவர்களுக்கிடையே உள்ள காதலில் புதுமை என்று எதுவுமில்லை.

சசியின் திடீர் மனைவியாக வரும் நிகிலா சில காட்சிகளில் கண் கலங்குகிறார். திருமணத்துக்குப் பிறகு சசியே உயிர் என மெல்ல மெல்ல அவரை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் குடும்பப் பெண்ணாக நம்மை ஈர்க்கிறார்.

சசியின் தம்பியாக வரும் ஆனந்த் நாக்- அவருடைய காதலி வர்ஷா இளவட்ட காதலால் இரண்டு குடும்பங்கள் சந்திக்கும் சாதிப் பிரச்சனைகளை காட்டியிருக்கிறார்கள்.

சமுத்திரக்கனி விஜய் வசந்த் உள்ளிட்ட ‘நாடோடிகள்’ கோஷ்டி இதில் பெண்ணை கடத்துகிற காட்சியில் சீரியஸாக வந்து, பின்னர் காமெடி பீஸ் ஆகி விடுகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே கம்பீரத்துடன் வரும் பிரபு கிளைமாக்ஸில் ”ப்ளீஸ் என் பொண்ணை காப்பாத்துங்க…” என்று ஹீரோவிடம் வந்து நிற்கும் காட்சியில் வெயிட் இறங்கி விடுகிறார்.

வில்லியாக வரும் விஜி கிராமத்து பொம்பளைக்கே உரிய அதே பழி வாங்கும் எண்ணத்துடனும், வைராக்கியத்துடனும் இருப்பது மிரட்டல்.

ஒரு இளம் பெண்ணை கட்டிக்கொண்டு அவளை நான்கு பேரிடமிருந்து பாதுகாக்க தம்பி ராமையா படுகிற பாடு அத்தனையும் காமெடிக்கு கியாரண்டி!

டி.இமானின் இசையில் வழக்கமான அதே பின்னணி அடி, அதே கேட்டு கேட்டு சலித்துப் போன ட்யூன்கள்! ஆனாலும் ரசித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் மனசுக்கு இதம்.

வசந்தமணியின் வழக்கமான கிராமத்து பின்னணி திரைக்கதையில் சிலாகிக்க ஒன்றுமில்லை, என்றாலும் அங்கங்கே சில ட்விஸ்ட்டுகளை வைத்து ரசிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

0 714

விஜய் – அட்லி இவர்களுடன் வில்லனாக பிரபல இயக்குநர் மகேந்திரன் அறிமுகம். இந்த காம்போவே ‘தெறி’ மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எகிறி விட்டிருந்தது.

ஒரு அரசியல்வாதிக்கும், ஒரு ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கின்ற மோதலும், அதற்கிடையே சமந்தாவுடனான விஜய்யின் காதலும், விஜம் மீதான எமி ஜாக்சனின் ஏக்கமும் தான் இந்த ‘தெறி’.

தனது ஒரே மகளான நைனிகாவுடன் கேரளாவில் பேக்கரி நடத்திக் கொண்டே அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் விஜய்.

மகளை எப்போதுமே ஸ்கூலில் லேட்டாக கொண்டு போய் விடுவதே வாடிக்கையாக வைத்திருக்கும் விஜய்க்கு பதிலாக ஒருநாள் நைனிகாவை அவளது ஸ்கூல் டீச்சரான எமி ஜாக்சனே தனது ஸ்கூட்டியில் கூட்டிப் போகிறார். போகிற இடத்தில் நைனிகாவுக்கு சிறிய விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்படுகிறார்.

லோக்கல் ரவுடியால் வருகிற அந்த பிரச்சனையில் அமைதியாக சென்று விட்டாலும் விடாது கருப்பாக வில்லன் கோஷ்டி விஜய்யுடம் மோதுகிறார்கள். அப்போது தான் அவர் ‘பாட்ஷா’ ரஜினி ஸ்டைலில் சாதாரண ஆள் இல்லை அவருக்கு இன்னொரு பயங்கரமான ப்ளாஷ்பேக் இருப்பது தெரிய வருகிறது.

டெல்லி நிர்பயா மாதிரி ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளம் பெண்ணை அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் கற்பழித்து கொன்று விட, பதிலுக்கு போலீஸ் அதிகாரியான விஜய் மகேந்திரனின் மகனை அதே பாணியில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்து கொன்று விடுகிறார்.

மகனை இழந்த மகேந்திரன் தனது மகனை கொன்றவனை பழி வாங்கத் துடிக்க, அது விஜய் தான் என்று தெரிய வரவும் விஜய் குடும்பத்தையே பழி வாங்குகிறார். அந்த மோதலில் விஜய் மட்டும் தன் மகளுடன் தப்பித்து விட, அதே விஜய் தான் கேரளாவில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் என்று தெரிய வருகிறது.

மிச்சமிருக்கும் விஜய் மற்றும் அவரது மகளை போட்டுத் தள்ள மீண்டும் வருகிறார் மகேந்திரன். இந்த பழி வாங்கும் போட்டியில் கிளைமாக்ஸில் ஜெயித்தது யார்? என்பதே கதை.

பேபி….. என்று நைனிகா கூப்பிடவும் விஜய்யின் எண்ட்ரி செம மாஸ் ஆன எண்ட்ரி! தியேட்டரில் விசில் சத்தம் அடங்க இரண்டு நிமிடங்கள் ஆகிறது. மூன்று விதமான கேரக்டர்களில் தனது வழக்கமான ஆக்டிங், சுவிங்கம்மை வாயில் போடும் ஸ்டைல், ஜித்து ஜில்லாடியில் டான்ஸ், ஆக்‌ஷன்ஸ் என வருகிற சீன்களில் எல்லாம் படத்தின் டைட்டிலைப் போலவே ‘தெறி’க்க விடுகிறார் விஜய்!

யாருக்கும் பயப்படத நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டரில் காஸ்ட்யூமில் அப்படி ஒரு கன கச்சதம். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் மிரள வைக்கும் மிடுக்கு! ஆக்டிங், ஸ்டைல், டான்ஸ், ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி என வருகிற சீன்களில் எல்லாம் படத்தின் டைட்டிலைப் போலவே தியேட்டரை ‘தெறி’க்க விடுகிறார் விஜய்!

இரண்டு நாயகிகளில் டாக்டராக வரும் எமி ஜாக்சன் மலையாள டீச்சராக வருகிறார். தலையில் டோப்பாவை வைத்துக் கொண்டு சோடாபொட்டிக் கண்ணாடியை போட்டுக் கொண்டு வந்தாலும் கேமரா வழியாக எமியின் அசரடிக்கும் அழகு மட்டுமே ரசிகர்களை ஈர்க்கிறது. மற்றபடி அவரது டீச்சர் கேரக்டரில் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. டாக்டராகவும், விஜய்யின் காதலி பின் மனைவியாகவும் வரும் சமந்தாவுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லி.

விஜய்யின் பக்கா ஆக்‌ஷன் எண்டர்டெயினர் என்பதையும் தாண்டி மாமியார் – மருமகள் உறவு, மாமனார் – மருமகன் உறவு என ஃபேமிலி ரசிகர்களையும் தியேட்டருக்கு வர வைக்கிறார் இயக்குநர் அட்லி. ராதிகா – சமந்தா உடனான உரையாடலும், விஜய் – சமந்தாவின் அப்பா உடனான உரையாடலும் நெகிழ வைக்கும் காட்சிகள்!

படத்தில் காமெடிக்கென்று தனியாக யாருமில்லை என்கிற உணர்வே தெரியாமல் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள் விஜய், சமந்தா, ராதிகா, கூடவே நைனிகாவும்! அதிலும் விஜய்யை நைனிகா கலாய்க்கிற இடங்கள் அருமை. இதுபோதாதென்று விஜய் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணியும் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகின்றன.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கும் மீனாவின் மகள் நைனிகாவின் டயலாக்ஸ் டெலிவரி, கிடைக்கிற கேப்புகளில் எல்லாம் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்கள் மூலம் காமெடி செய்வது என செம க்யூட் கேர்ள் ஆக கலக்கியிருக்கிறார்! ( கண்டிப்பா அம்மா மாதிரியே நீயும் ஒரு ரவுண்டு வருவேம்மா…)

ஹீரோயிஸம் என்பதையும் தாண்டி குழந்தைகளையும் கவர வேண்டுமென்கிற விஜய்யின் சமீபகால படங்களில் மாற்றம் தெரிவது வரவேற்கத்தக்கது. அதற்கு வலு சேர்ப்பது போல விஜய் – நைனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்திருக்கிறது.

அதிகம் அலட்டல் இல்லாத வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் பிரபல இயக்குநர் மகேந்திரன். அப்பப்பா ”தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்று சொல்வதைப் போல அவர் சண்டை போடாவிட்டாலும் பார்வையும், குரலுமே டெரர் வில்லத்தனத்தின் உச்சம்!

”இந்த உலகத்துல சின்னவங்க பெரியவங்கன்னு யாருமே இல்லை, நல்லவங்க – கெட்டவங்க ரெண்டே பேரு தான்”, ”சாவுக்கு மேல உனக்கு ஒரு வலியை கொடுக்கணும்”, ”ஒரு பொண்ணுகிட்ட இன்னொரு பொண்ணு தான் மனசு விட்டுப் பேச முடியும்” என சின்ன சின்னதான வசனங்கள் மனசை ஈர்க்கின்றன.

ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவில் விஜய் படு ஸ்மார்ட்டாக தெரிகிறார். நைனிகா க்யூட் பேபியாக அசத்துகிறார். விக்கு வைத்த எமி கூட கேமராவில் அழகோ அழகு, சமந்தா கொஞ்சம் மேக்கப்பை குறைத்திருக்கலாம்!

ஜி.வி.பிரகாஷின் இசையில் பின்னணி இசை ‘ஹை ஸ்பீடு’ என்றால் பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம்! முதல் பாதி வேகமாக நகர்ந்தாலும் இடைவேளைக்கும் பிறகு சில காட்சிகளை எடிட்டர் பிரவீன் கே.எல் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

”எந்த குழந்தையும் இந்த உலகத்தில் கெட்டவனாக பிறப்பதில்லை, மீறி அவன் கெட்டவன் ஆகிறான் என்றால் அதற்கு அவனது பெற்றோர் வளர்ப்பு தான் காரணம்” என்கிற சமூக கருத்தை தான் ஆக்‌ஷன் ப்ளஸ் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக தந்திருக்கிறார் இயக்குநர் அட்லி.

கருத்து நன்றாக இருந்தாலும் ஏற்கனவே பார்த்த பாட்ஷா, என்னை அறிந்தால், சத்ரியன் போன்ற படங்களின் சாயலையும், வில்லனுக்கு தண்டனை கொடுக்கும் விஜய்யைப் பற்றி பல தரப்பட்டமக்களிடையே மைக்கைப் பிடித்து கருத்து கேட்டு அதை காட்டுவது போன்ற ‘ரொம்ப பழைய’ காட்சியையும் தவிர்த்து விட்டு புதிதாக யோசித்திருக்கலாமே அட்லி சார்!.

அதையும் தாண்டி விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் குடும்பத்தோடு ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இரண்டையும் ஃபேலன்ஸ் செய்து திரைக்கதை அமைக்கப்பட்ட பக்கா மாஸ் படம் தான் இந்த ‘தெறி’.

படத்தோட கிளைமாக்ஸ்ல விஜய் ஃபேன்ஸுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்கப்பா…!

தெறி – பக்கா மாஸ்!

0 688

”கிராமங்களில் என்ன ஓய் எப்படி இருக்கே?” என்பார்களே அதில் வரும் ‘ஓய்’ என்ற வார்த்தையைத் தான் படத்தின் டைட்டிலாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் ஆளுக்கு ஒரு தடவை தான் நாயகனும், நாயகியும் படத்தின் டைட்டிலை உச்சரிக்கிறார்கள். படம் முடிந்து வெளியே வரும் போது ‘ஓஹோய்’ என்று சொல்ல வைத்து விடுகிறார்கள்.

சென்னையில் தங்கி வேலை பார்க்கும் ஹீரோ கீதன் தன் காதலி பாப்ரிகோஷ் உடன் வெளிநாட்டில் செட்டிலாகும் திட்டத்தில் இருக்கிறார். அவளோடு தன் கிராமத்துக்குச் சென்று எப்படியாவது தனது குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்கி விடலாம் என்பது அவருடைய திட்டம்.

அப்போது ஒரு கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் இன்னொரு நாயகியான ஈஷா தனது அக்காவின் திருமணத்துக்காக பரோலில் வெளியே வருகிறாள். தனது ஊருக்கு போகிற பேருந்தில் நாயகன் கீதனின் அறிமுகம் கிடைக்கிறது. அவன் போட்டிருக்கும் ஒரு தங்கச்சங்கிலியை திருடன் ஒருவன் அபேஸ் செய்ய, அவனைத் துரத்திப் போகும் ஈஷா பேருந்தை மிஸ் பண்ணுகிறாள்.

அதோடு பஸ்சில் தவறவிட்ட தனது உடமைகளை வாங்குவதற்காக கீதனைத் தேடி அவனது சொந்த ஊருக்கு வருகிறாள். வந்த இடத்தில் ஈஷா அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியைப் பார்த்ததும் மொத்த குடும்பமும் அவள் தான் கீதன் காதலிப்பதாகச் சொன்ன பெண் என்று நினைத்து விழுந்து விழுந்து உபசரிக்கிறார்கள்.

ஈஷாவும் வெளியே வந்திருக்கும் தன்னை வில்லன் கோஷ்டி கொலை செய்ய தேடிக்கொண்டிருப்பதை அக்கா மூலமாக கேள்விப்பட்டவுடன் அவளது திருமணத்துக்குப் போகாமல் கீதனின் வீட்டிலேயே தங்க ஆரம்பித்து விடுகிறார்.

பிறகு ஈஷா வந்த விஷயம் கீதனுக்கு தெரிய வர, அவனும் வந்து ”இவள் என் காதலியே இல்லை” என்று எவ்வளவு சொல்லியும் ஈஷாவின் நல்லவிதமான நடவடிக்கைகளைப் பார்த்து மொத்த வீடும் கீதன் சொல்வதை நம்ப மறுத்து ஈஷாவை முழுமையாக நம்புகிறது.

இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் போது கீதனின் உண்மையான காதலியும் அவனைத் தேடி கிராமத்துக்கு வந்து விடுகிறாள்.

இருவரில் கீதன் யாரை கைப்பிடித்தார்? என்பதே கிளைமாக்ஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிட்டி, வில்லேஜ் இரண்டும் கலந்த பேக்-ட்ராப்பில் ஒரு குடும்பச் சித்திரத்தை பார்த்தை உணர்வைத் தருகிறது பிரான்சின் மார்க்கஸின் திரைக்கதை!

காதல், மோதல், வெகுளித்தனம், வீரம் என பல ஆளுமைகளை ஒரே கேரக்டரில் வெளிப்படுத்த அமைந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் நாயகன் கீதன். அதேபோல கிளைமாக்ஸில் சிலம்பம் சுற்றுவதிலும் அசராமல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். அடுத்தடுத்த படங்களின் கதைத் தேர்விலும் இதேபோல் கவனம் செலுத்தினால் நிச்சயமாக ஒரு ரவுண்டு வரலாம் ப்ரோ!

நாயகிகளாக வரும் ஈஷா- பாப்ரிகோஷ் இருவரில் பாப்ரிகோஷ் சிட்டி கல்ச்சரில் வளர்ந்த பெண்ணாகவும், வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிற பெண்ணாகவும் வருகிறார். வசனம் பேசுவதிலும் தடுமாறுவது லிப் மூவ்மெண்ட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது. நல்லவேளையாக பெரிதாக அவருக்கு காட்சிகள் இல்லை.

இன்னொரு நாயகியாக வரும் ஈஷா தான் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். கிட்டத்தட்ட விக்ரமன் படங்களின் வரும் ஹீரோக்களின் கேரக்டர் போன்றது அவரது கேரக்டர். கிளைமாக்ஸில் அவர் பேசும் நீண்ட வசனம் தடுமாற்றமில்லாத நடிப்புக்கு நல்ல உதாரணம். பாடல் காட்சியிலும் கவர்ச்சி காட்டி ஆல் கிளாஸ் ரசிகர்களையும் கவர்கிறார்.

தாத்தாவாக வரும் சங்கிலி முருகன், மாமாவாக வரும் அர்ஜூனன், அப்பாவாக வரும் நாகிநீடு என படத்தில் வருகின்ற மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்க வைக்கின்றன.

இளையராஜாவின் இசையில் பின்னணி இசை அபாரம் என்றால், ‘தென்றல் வரும் வழியில்’ உட்பட படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் சுகராகம்!

”வரும் போது மனசில்லாமல் வந்தேன்.. இப்ப போக மனசே இல்லாமல் போறேன்”, ”விட்டுக் கொடுத்தா இப்படித்தான் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல அதை சொல்லிக் காட்டத் தோணும்” ”அடிப்படையில நல்லவனா இருக்கிற ஒருத்தனால இந்தமாதிரியான தப்பையெல்லாம் செய்யவே முடியாது” “நீ கொலையே செஞ்சிருந்தாலும் அது நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும்” போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன.

முதல் காட்சியில் நாயகி ஜெயிலில் இருப்பது போல காட்டியவர் அவர் என்ன குற்றத்திற்காக சென்றார் என்பதை கடைசி வரை சொல்லமலேயே படத்தை முடிப்பது, என்னதான் குடும்ப சங்கிலியை கழுத்தில் போட்டுக் கொண்டு வந்தாலும் அவள் தான் கீதனின் காதலி என்று முரட்டுத்தனமாக நம்புவது, அது குறித்து ஈஷா சொல்ல வரும் போதெல்லாம் அவரை பேச விடாமல் தடுப்பது, தன் வீட்டுப் பையன் கீதன் சொல்வதை நம்பாமல், யாரென்றே தெரியாத எங்கோ இருந்து வந்த ஒரு பெண் சொல்லும் பொய்களை கண்மூடித்தனமாக மொத்த குடும்பமும் நம்புவதாக காட்டியிருப்பது என படத்தில் சில லாஜிக் மீறல்கள் வரிசைக் கட்டுகின்றன.

அவைகளை மட்டும் ஓரங்கட்டி விட்டுப் பார்த்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதல், ஃபேமிலி, செண்டிமெண்ட், காமெடி கலந்து அழகான கிராமத்து பின்னணியில் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தை தான் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரான்சிஸ் மார்க்கஸ்.

ஓய் – ஓஹோய்!

0 729

அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் கலையரசன், மெட்ராஸ் ஜானி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் இளம் டெக்னிஷியன்களின் கூட்டணியில் வெளிவந்துள்ள படம் ‘டார்லிங் 2’.

கதைப்படி, ஐந்தாறு இளம் வயது நண்பர்கள். அதில் இருவர் சகோதரர்கள். அவர்களில் ஒருத்தரின் மதம் மாறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த சகோதரர் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து எஞ்சிய நண்பர்கள் வழக்கம் போல வால்பாறைக்கு ட்ரிப் போகின்றனர்.

அங்கு சென்று ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்குகின்றனர். அந்த கெஸ்ட் ஹவுஸில் இறந்து போன நண்பர் ஆவியாக வருகிறார். வந்தவர், அவர்களில் ஒருத்தரின் உடம்புக்குள் புகுந்து கொண்டு அவர்களை படாத பாடு படுத்துகிறார். கூடவே அவரது காதலியும் சேர்ந்துகொள்கிறார். அவர்களிடமிருந்து ஐந்து நண்பர்களும் தப்பி பிழைத்தார்களா? இல்லையா..? எதற்காக இறந்து போன நண்பர் ஆவியாக வந்து அவர்களை துரத்த வேண்டும்..? என்பதே டார்லிங் 2 படத்தின் கதையும் களமும்.

கலையரசன், ரமீஸ் ராஜா, காளி வெங்கட், ராம்தாஸ் உட்பட அனைவருமே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரமீஸின் நடிப்பு மிரட்டல். கலையரசனும் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார்.

நாயகியாக மாயா பல பெரிய படங்களில் நாம் ஹீரோயின்களுக்கு தோழியாக பார்த்துப் பழகிய முகம் தான் என்றாலும் டார்லிங் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படத்தில் அழகாக இருக்கிறார். அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஒளிரும் ஓவியபதிவு. பேய் பயமுறுத்தல் காட்சிகளில் ஒவர் ஆட்டம் போட்டிருப்பது ரசிகனை மிரள செய்கிறது. ரதனின் பின்னணி இசை பேயை விட அதிகம் பயமுறுத்துகிறது.

விளையாட்டாக நாம் செய்யும் சில விஷயங்கள் ஒருவரின் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கின்றது என்ற ஒரு சின்ன லைனை எடுத்துகொண்டு 2 மணி நேரம் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சதீஷ். படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் டெக்னிக்கலாக மிரட்டியிருக்கிறார். ஆயிரம் பேய் படங்கள் வந்தாலும் திகில் உணர்வுகளை சில படங்கள் தான் தருகின்றன. அதில் இந்த டார்லிங் 2வும் ஒன்று.

0 847

இதேநாளில் வெளிவந்திருக்கும் இன்னொரு பேய்ப்படம்.. ஆனால் இதற்கு காமெடி முலாம் பூசி ஓரளவு ரசிக்கும்படி படமாக்கி இருக்கிறார்கள்.

சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடும் வைபவ், விடிவி கணேஷின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை காதலிக்கிறார்.. இந்நிலையில் ஒருநாள் பைக்கில் சென்ற ஓவியா விபத்தில் சிக்கி பலியாக, கீழே கிடந்த அவரது செல்போனை சுட்டுக்கொண்டு வருகிறார் வைபவ்.. அன்றைய தினம் விடிவி கணேஷ், அவரது தம்பி சிங்கப்பூர் தீபன் இருவரும் சேர்ந்து வைபவின் வீட்டில் தங்குகிறார்கள்.. வைபவ் வைத்திருக்கும் தனது செல்போன் மூலம் அவர்களை டார்ச்சர் செய்யா ஆரம்பிக்கிறது ஓவியாவின் ஆவி.

தனது நிறைவேறாமல் போன காதலை சொல்லி, இன்னொரு பெண்ணை மணந்துகொண்ட தனது காதலன் கருணாகரனை அழைத்து வரச்சொல்லி, அதற்கு பணயமாக ஐஸ்வர்யா ராஜேஷை பிடித்து அவர்மேல் இறங்குகிறது ஓவியாவின் ஆவி.

மந்திரவாதிகள் மூலம் முயற்சி செய்தும் ஓவியாவை ஒன்றும் செய்யமுடியாததால், வேறு வழியின்றி கருணாகரனை அழைத்து வந்து பேயின் முன் நிறுத்துகின்றனர்.. பேய் முன்வைக்கும் வினோத கோரிக்கையை கேட்டு கருணாகரன் உட்பட அனைவரும் ஷாக்கானாலும், அவரது மனைவி பேயின் டீலுக்கு ஒப்புக்கொள்கிறார். அப்படி என்ன டீல் அது.? அதற்கு அவர் ஏன் ஒப்புக்கொண்டார் என்பது க்ளைமாக்ஸ்.

வைபவ், விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன் கூட்டணி படம் முழுவதும் நம்மை கலகலக்க வைக்கிறார்கள்.. போதாக்குறைக்கு ஆரம்பத்தில் யோகிபாபுவும், இறுதியில் கருணாகரணும் சிங்கம்புலியும் சேர்ந்துகொண்டு களைகட்ட வைக்கிறார்கள். இடைவேளை வரை சாதாரண ரோலில் பயணிக்கும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு, இடைவேளைக்குப்பின் நடிப்பில் வெரைட்டி காட்டும் வாய்ப்பு கிடைக்க, சரியாக பயன்படுத்தியுள்ளார்.. கவர்ச்சிப்பேயாக வரும் ஒவ்யா நன்கு மிரட்டவும் செய்திருக்கிறார். க்ளைமாக்ஸில் காமெடி நடிகை மதுமிதா அசத்துகிறார்.

பேய்க்கதை என்றாலும் அதில் சீரியசை குறைத்து காமெடி ட்ராக்கிலேயே படம் முழுதும் பயணிக்கிறது திரைக்கதை.. சித்தார்த் விபினின் இசையும் பானு முருகனின் ஒளிப்பதிவும் படத்தின் காமெடி மூடை தக்கவைக்கின்றன.. இந்தப்படத்தில் பேய்காட்சிகள், மாறும் கதைக்கான அழுத்தம் குறைவாகவே கொடுக்கப்பட்டு இருந்தாலும், முழுதாக ஒரு பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்..

0 676

அமைதியான நாயகி ஷிவதா, அவ்வபோது ஒரு கனவு காண்கிறார். அந்த கனவில் வரும் அவரது உயிரிழந்த அம்மா, தன்னுடன் வந்துவிடு, இந்த உலகத்தில் அமைதியாக வாழலாம் என்று அழைக்கிறார். இந்த கனவு காணும்போது சாலையில் ஷிவதா தனியாக நடந்து செல்லுகிறார். இதற்கிடையில் குறிப்பிட ஒரு கலரில் உள்ள பொருட்களைப் பார்த்தால் உடனே அவற்றை அபகரித்துவிடும் ஷிவதாவுக்கு இவை நடப்பதே தெரியவில்லை.

இதற்கிடையில், அவரது கணவர் அஸ்வின், அவரை மனநல மருத்தவரிடம் அழைத்துச் சென்றால், அங்கு ஷிவதா மேல் சுவரில் நடந்து மருத்துவரையே பீதியடைய வைக்க, இது தனது மனைவி ஷிவதா அல்ல, என்று புரிந்துக்கொள்ளும் அஸ்வின், அவர் யார் என்பதை தெரிந்துக்கொண்டாரா, அந்த ஆன்மா எதற்காக ஷிவதா உடம்பில் உள்ளது என்பதை கண்டுபிடித்தாரா? என்பது தான் கதை.

தமிழ் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களம். திரைக்கதை வித்தியாசமாக இருந்தாலும், படத்தில் இடம்பெறும் சில நடிகர்களால், படம் நம்மைவிட்டு விலகிச்செல்கிறது. அதிலும், ஆன்மாக்கள் உளவும் ஒரு பகுதி முழுவதுமே வெளிநாட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

படத்தில் ஷிவதாவுக்கு நடிக்க ஏகப்பட்ட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி அழகாக நடித்துள்ளார். அஸ்வினும் தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்திற்கு பலமாக அமைந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகள் ஏதோ கார்டூன் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் பேய்ப் படங்களில் இருந்து சற்று வித்தியாசமான பேய்ப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஷிவ் மோகா, அதை ரசிகர்களுக்கு புரியும்படி இயக்கியிருந்தால், அவரும் ஜெயிச்சிருப்பார், தயாரிப்பாளரும் பிழைத்திருப்பார்.

0 638

மீண்டும் ராணுவ வீரன் பின்னணியில் ஒரு படம் என்கிற லெகுலர் டச்சோடு இந்தப்படம் முடிந்து போவதில்லை. அதையும் தாண்டி நாயகன் – நாயகிக்குமான காதல், நாயகி – அவளது அண்ணனுக்குமான பாசம் என படம் முழுவதிலும் யதார்த்தம் வழிந்தோடுகிறது.

இப்படத்தின் இயக்குநர் கதிரவன் பிரபுதேவாவின் உதவியாளராம். ஆனால் அதற்கான ‘மிதமிஞ்சிய’ எந்த கமர்ஷியல் அடையாளங்களும் படத்தில் இல்லை. அதுதான் நம் மனதை வெகுவாக ஈர்க்கிறது. திரைக்கதையின் வெற்றியும் அதுவே.

தென் மாவட்டமான சங்கரன் கோவில் அருகில் உள்ள ஆராய்ச்சிப்பட்டி என்ற கிராமம் தான் படத்தின் கதைக்களம். இந்த ஊரில் இருப்பவர்களுக்கு பரம்பரை தொழிலே திருடுவது தான். அப்படிப்பட்ட கிராமத்தில் திருட்டு தொழிலில் ஈடுபடாமல் தனக்குப் பிடித்தமான ராணுவத்தில் வேலை செய்கிறார் ஹீரோ கண்ணன்.

ஒரு கோடை விடுமுறையில் தனது கிராமத்துக்கு வர, வந்த இடத்தில் அதே ஊரில் இருக்கும் இன்ஸ்பெக்டர் மு.களஞ்சியத்தின் தங்கையான நாயகி பிரியங்காவிடம் மனசை பறிகொடுக்கிறான்.

இருவருடைய காதலும் இவருக்கு தெரிய வர, உடனே கையில் அரிவாளோடு ஹீரோவை வெட்டச் செல்வார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அதுதான் இல்லை.

தங்கையின் விருப்பப்படியே நாயகனை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

ஆனால் விதி ஹீரோவின் நண்பன் ரூபத்தில் விளையாடுகிறது. ஒரு திருட்டு தொடர்பாக கண்ணனின் நண்பனை போலீஸ் ஸ்டேஷனில் மு.களஞ்சியம் ‘விசாரிக்க’ அதில் அவன் இறந்து போகிறான்.

இதனால் கோபமடையும் கண்ணன் மு. களஞ்சியத்துடன் மோத, அதனால் ஏற்படும் பிரச்சனைகளால் நாயகனும், நாயகனும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நெகிழ்வுடன் தந்திருக்கிறார் இயக்குநர் கதிரவன்.

படத்தின் ஆரம்பக் காட்சியின் எளிமையே படத்தை தொடர்ந்து பார்க்கும் ஆவலை தூண்டி விடுகிறது. நாயகனாக வரும் அறிமுக நாயகன் கண்ணன் ஒரு புதுமுகம் போல இல்லாமல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எந்த ஒப்பனையும் இல்லாமல் எந்த பில்டப்பும் இல்லாமல் அவருடைய அறிமுகம் திரையில் ஆரம்பிக்கிறது.

பிரியங்கா மீது காதல் கொண்டு அவள் நினைவாகவே இருக்கும் போதும் சரி, உயிருக்குயிரான நண்பன் இறந்து போனதும் துடித்து சினம் கொள்ளும் போதும் சரி நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார்.

நாயகி பிரியங்கா இது போன்ற தங்கை கேரக்டருக்கென்றே நேர்ந்து விட்டவர் போல… ‘கங்காரு’ படத்தில் ஒரு முரட்டு அண்ணனுக்கு தங்கையாக நடித்தவர் இதில் அதிலிருந்து விலகி பாசம் மட்டுமே காட்டுகிற, எதிலும் நேர்மை பார்க்கக்கூடிய அண்ணனுக்கு தங்கையாக வருகிறார். பாவாடை, தாவணியில் ஒரு கிராமத்து தேவைதையாக வருகிறார்.

பிரியங்காவின் அண்ணனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் வரும் இயக்குநர் மு.களஞ்சியம் தன் தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். தங்கை திருமண வயதை அடைந்த பிறகும் கூட அவளை ஒரு குழந்தையாக நினைப்பதும், அவள் கண்ணனை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் யதார்த்தம் புரிந்து அவளுக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பதும் ஒரு தங்கை மீதான உண்மையான பாசத்தின் வெளிப்பாடு.

இமான் அண்ணாச்சியின் காமெடி காட்சிகள் எல்லாமே புதுமையுடன் யோசிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும் தமிழ் வார்த்தையை தப்பு தப்பாக பேசி அவரை மண்டை காய வைப்பவரும், கையை நீட்டி நீட்டி பேசி ஒருவர் கலாய்ப்பதும், ‘சும்மா சும்மா’ என்ற வார்த்தையால் அவர் சக மனிதர்களிடம் படும் பாடும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.

நொட்டாங்கை, மூச்சு புடிச்சிக்கிச்சு, கள்ளிச்செடி, பம்புசெட்டு, பலவட்ற என தென் தமிழகத்தில் இன்றைக்கும் பரவலாக பழக்கத்தில் இருக்கக்கூடிய வார்த்தைகளை சரியான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

”ஒருத்தன் கெட்டவனா இருக்கும் போது அவன் கூட இருக்கிறது தப்பு. அவனே நல்லவனா திருந்தி வாழுறப்போ அவன் கூட பேசாம இருக்கிறது அதை விட பெரிய தப்பு” போன்ற வசனங்கள் படத்துக்கு பலம்.

சாம்பசிவத்தின் இசையில் வைரமுத்துவின் வரிகள் தென் மாவட்ட சொற்களில் வார்த்தை ஜாலமிடுகிறது. பின்னணி இசை ரம்யம்.

ஒளிப்பதிவு உட்பட படம் முழுவதுமான காட்சிகளில் யதார்த்தம் பெருக்கெடுத்து ஓடுவதற்கான அத்தனை சின்னச் சின்ன விஷயங்களிலும் இயக்குநரின் மெனக்கிடல் தெரிகிறது.

நாயகன் – நாயகி காதல் அந்த காதலுக்கு குறுக்கே நிற்கும் நாயகியின் அண்ணன் என்கிற தமிழ் சினிமாவின் ரெகுலர் ஃபார்முலா படமாக இல்லாமல் நிஜத்தில் நடந்த சம்பவங்களோடு கற்பனையையும் புகுத்தி ஒரு யதார்த்தமான படமாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கதிரவன்.

0 580

புதுவிதமான ரசனையை ரசிகர்களுக்கு தர வேண்டும் என்கிற வேட்கை தமிழ்சினிமாவில் குறிப்பிட்டு சில இயக்குநர்களுக்கு மட்டுமே இருக்கும். அந்த இயக்குநர்கள் வரிசையில் நலன் குமாரசாமிக்கும் ஒரு இடம் உண்டு.

‘சூது கவ்வும்’ படத்தில் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தவர் தனது இரண்டாவது படத்தில் கொரியன் பட அனுபவத்தை தர முயற்சித்திருக்கிறார்.

அதற்காக யாருக்கும் தெரியாமல் கதையை திருடவில்லை. மாறாக My Dear Desperado என்ற கொரியன் படத்தின் ரீமேக் உரிமையையே முறையாக வாங்கி தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல கதையில் சில மாற்றங்களையும் சேர்த்து கொடுத்திருக்கிறார்.

ஒரு வீணாய்ப்போன அரசியல்வாதியின் அடியாள் எப்படியிருப்பான்?

அப்படிப்பட்டவரை நம்பி ஜெயிலுக்கு போய் வரும் விஜய் சேதுபதி வெளிவந்த நாள் முதல் தன்னை ஒரு பெரிய ரவுடியாக நினைத்துக் கொள்கிறார். நினைப்பு தான் அப்படியே தவிர, எங்கு போனாலும் அடி வாங்கி விட்டு வருகிற அளவுக்கு ஒரு தர்த்தி!

விழுப்புரத்தில் வசிக்கும் ‘பிரேமம்’ புகழ் நாயகி மடோனா செபாஸ்டியன் ஐ.டி துறையில் வேலை செய்வதற்காக சென்னைக்கு தனியாக வருகிறார். முதல் பாடலிலேயே அவருக்கு வேலை கிடைத்து அதை கொண்டாட்டமாக மாற, அந்தப் பாடல் முடியவும் கம்பெனியை இழுத்து மூடி விடுகிறார்கள்.

எங்கே வீட்டுக்குப் போனால் விழுப்புரத்திலேயே தனது வாழ்க்கை முடிந்து விடுமோ என்று யோசிக்கும் மடோனா கையில் இருக்கும் காசின் இருப்பு தீரும் வரை அடுத்தடுத்த கம்பெனிகளில் வேலை தேடுகிறார்.

அதோடு ப்ளாட்டில் நண்பர்களோடு இருந்தவர், வேலை போய் விட்டதால் தனியாளாக ஒரு லோக்கலான ஏரியாவில் ஐயாயிரம் ரூபாய் வாடகையில் வீடு எடுத்து தங்குகிறார்.

அந்த வீட்டின் எதிர் வீடு தான் ஹீரோ விஜய் சேதுபதியின் வீடு. முதலில் அறிமுகம், அப்புறம் நட்பு எனப் பயணிக்கிற கதை அவர்களுக்குள் காதல் இருக்கிறதா? இல்லையா? என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே நன்றி வணக்கம் போடுகிறார்கள்.

கதை கொரியன் படத்தின் ரீமேக் என்பதால் அதைப்பற்றி பெரிதாகப் பேசத்தேவையில்லை. ஆனால் நலன் குமாரசாமியின் திரைக்கதையில் இருக்கும் அழகியலை மனம் விட்டுப் பாராட்டலாம்.

எப்போதுமே மனசுக்குள் உற்சாகத்தை தொலைக்க விடாமல் அப்படி ஒரு ப்ரெஸ்னெஸ் தெரிகிறது ஒவ்வொரு காட்சியிலும்! விஜய் சேதுபதிக்கும், மடோனாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராகவே ஒர்க்-அவுட் ஆகியிருப்பதை திரையில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

படத்துக்கு படம் ‘கெத்து’ காட்ட ஆசைப்படும் ஹீரோக்களுக்கு மத்தியில் ‘வெத்து வேட்டு’ கேரக்டராக இருந்தாலும் அதில் செழுமையான நடிப்பை வெளிப்படுத்தி சென்டம் அடிக்கிறார் விஜய் சேதுபதி.

கிட்டத்தட்ட ‘நானும் ரவுடி தான்’ படத்தில் தன்னை ரவுடியாக நினைத்துக் கொள்வாரே அப்படிப்பட்ட கேரக்டர் தான் இதிலும். தன்னைத் தானே பெரிய அடியாளாக நினைத்துக் கொள்பவர் ஒரு பாருக்குள் சென்று நான்கு பேரிடம் சண்டைப்போட்டு விட்டு செமத்தியாக அடி வாங்கிவிட்டு கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருவதெல்லாம் காமெடி காக்டெயில்!

‘பிரேமம்’ மடோனாவுக்கு தமிழில் இது அறிமுகப்படம். பெரிய அழகியில்லை என்றாலும் அவர் முகத்தில் எப்போதுமே ஒட்டிக்கொண்டிருக்கும் க்யூட்னஸ் கேரக்டரை இன்னும் அழகாக்கியிருக்கிறது. விஜய் சேதுபதியுடன் நடிப்பில் போட்டு போடுவது திரையில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு மொக்கையான கல்லூரியில் படித்து விட்டு வேலை கிடைக்க அவர் படும்பாடு இப்போதுள்ள கல்லூரிகளின் லட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

கதை விஜய் சேதுபதி – மடோனா இருவரை சுற்றியே நகர்வதால் இயல்பாக நடிக்கும் சமுத்திரக்கனி உட்பட மற்ற கேரக்டர்களுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை.

படத்தில் க்ளாஸான அம்சம் பின்னணி இசையும், பாடல்களும் தான்! ஹாலிவுட் படங்களில் மட்டுமே கேட்டு மனசை லேசாக்கும் பின்னணி இசையை படம் முழுமைக்கும் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அதே போல தினேஷ்குமாரின் ஒளிப்பதிவில் படத்தில் இளமை பொங்கி வழிகிறது. குறிப்பாக மழை பெய்யும் காட்சிகளில் நம் மனசுக்குள்ளும் குளிர் அடிக்கிறது.

”தமிழ்நாட்ல யாரு தான் இஞ்சினியரிங் இல்ல? இஞ்சினியரிங் படிச்சி முடிச்ச நாங்களே வேலைக்கு சிங்கி அடிச்சிக்கிட்டு இருக்கும். இதுல வேற இன்னும் 20 இஞ்சினியரிங் காலேஜுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க, அறிவிருக்கா இவங்களுக்கு?” என்று அரசாங்கத்தை நேரடியாகவே போட்டுத் தாக்கும் வசனங்களும் அருமை.

சின்ன சின்ன விஷயங்களை கூட சுவாரஷ்யமாக நகர்த்தும் இயக்குநர் அதற்காக எடுத்துக் கொள்ளும் நேரத்தில் தான் நம் பொறுமையை ரொம்பவும் சோதிக்கிறார்.

”நான் கஷ்டப்படுறப்போ என் கூடவே இருந்த ஒருத்தரை நான் அதுக்கப்புறம் சந்திக்கவே இல்லை” என்று நாயகி மடோனா சொல்லி முடிக்கவும் அங்க போட்டிருக்கலாம் வணக்கம் கார்டை!

ஆனால் விஜய் சேதுபதியும், மடோனாவும் மீண்டும் பெட்ரோல் பங்க்கில் சந்திப்பதாக வைக்கப்பட்டிருக்கும் காட்சி தான் வலிய திணிக்கப்பட்ட காட்சி.

அப்போதும் கூட இருவருக்குள்ளும் காதல் இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பத்துடனே டைட்டிலுக்கான அர்த்தமும் தெரியாமலேயே தியேட்டரை கடந்து போகிறார்கள் ரசிகர்கள்.

0 641

ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதே இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் மறந்து ஒரு மூன்று மணி நேரம் ரிலாக்ஸ் ஆகி விட்டுப் போகலாம் என்கிற எண்ணத்தில் தானே? அவர்களின் அந்த எதிர்பார்ப்புக்கு தோதான ஆளாக வந்திருக்கிறார் இந்த ‘மாப்ள சிங்கம்’.

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு சாதிக்காரர்கள் மத்தியில் அந்த ஊருக்கு பொதுவாக இருக்கும் தேரை யார் இழுப்பது? என்கிற பகை. இந்தப் பகையை சரி செய்ய வரும் கலெக்டரான பாண்டியராஜனையே மண்டையில் காயத்தோடு தான் திருப்பியனுப்புகிறார்கள்.

அந்தளவுக்கு 20 வருடங்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது தேர் இழுக்கும் பிரச்சனை!

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராக வரும் ராதாரவி கெளரவம் தான் முக்கியம் என்றிருப்பவர். காதல் திருமணத்தை அறவே வெறுப்பவர்.

அப்படிப்பட்டவரின் மகளை எதிர் சாதியில் உள்ள ஜெயப்பிரகாஷின் மகனை காதலிக்கிறாள்.

பெரியப்பாவைப் போலவே சாதி கடந்த காதல் திருமணங்களை தடுக்கும் ஹீரோ விமல் பெரியப்பா மகளின் காதல் தொடர்பாக பஞ்சாயத்துக்கு போகிற இடத்தில் ஜெயப்பிரகாஷின் மகளான அஞ்சலியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார்.

இதனால் அஞ்சலியை திருமணம் செய்வதற்காக காதலுக்கு எதிரான தனது மனநிலையை மாற்றி பெரியப்பா மகளையும், ஜெயப்பிரகாஷின் மகனையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்.

அவரது முயற்சி பலித்ததா? அஞ்சலியை கரம் பிடித்தாரா? 20 ஆண்டுகளாக ஊருக்குள் தேரை இழுக்கும் சர்ச்சை முடிவுக்கு வந்ததா? என்பதே கிளைமாக்ஸ்.

‘கருத்து கந்தசாமி’யாக வரும் ஹீரோக்களுக்கு மத்தியில் ‘கலகலப்பான’ ஹீரோவாக வருகிறார் விமல். இதுபோன்ற கிராமத்து கதைகளுக்கு கனகச்சிதமாக பொருந்திப் போகிறார். மீசையை முறிக்கிக் கொண்டு பளிச்சென்ற வெள்ளை வேட்டி, சட்டையுடன் அவர் நடந்து வரும் கம்பீரமே கேரக்டரின் தனி ரகளை தான்.

முதலில் சட்டம் தான் முக்கியம் என்று சீன் போடுவதும், பிறகு அதே காதலனை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தனியாக கூட்டி வந்து நையப்புடைத்து அனுப்புகிற காட்சியும் ரசிக்க வைக்கிறது.

நாயகி அஞ்சலியோ விமலுக்கு நேர் எதிராக கலர்ஃபுல் காஸ்ட்யூம்களில் கிறங்கடிக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்ததாலோ என்னவோ விமல் – அஞ்சலி காதல், காமெடி கெமிஸ்ட்ரி எல்லாமே இதில் சரியாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. சகலகலா வல்லவனின் பெருத்து காட்சியளித்த அஞ்சலி இதில் கொஞ்சம் மெலிந்து வந்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

வழக்கமான விமல் – சூரி காம்போவுடன் இதில் கூடுதலான காமெடிக்கு காளி வெங்கட், சுவாமிநாதன் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்கள் வருகிற காட்சிகளில் சிரிப்புக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார் இயக்குநர். சிங்கமுத்து வந்து போகும் சின்ன சீன் கூட காமெடி தான்.

அஞ்சலியின் முறைமாமனாக வரும் முனீஸ்காந்த், ராதாரவியின் மகளாக வரும் மதுமிளா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயப்பிரகாஷ் என்கிற திறமையான நடிகருக்கு படத்தில் அவ்வளவாக வேலையில்லை. அதேபோல விமல் கூடவே போட்டோகிராபராக வரும் வெள்ளைக்காரரும் எக்ஸ்ட்ரா பிட்டிங் தான்!

தருண்பாலாஜியின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை பளிச்சென்று பார்க்க முடிகிறது. அதைவிட அஞ்சலிக்கு அவர் வைத்திருக்கும் கேமரா கோணங்கள் எல்லாமே அவரே அஞ்சலியின் ரசிகரோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது. அந்தளவுக்கு திரையில் அஞ்சலியின் அழகை எக்ஸ்ட்ராவாக பந்தி வைத்திருக்கிறார்.

ரகுநந்தனின் இசையில் வந்தாரு மாப்ள சிங்க, பாடல்கள் உட்பட எல்லா பாடல்களும் எழுந்து நின்று டான்ஸ் ஆட வைக்கின்ற ரகம் தான்.

‘ உங்க ஊர்ல வேலையில்லாதவங்க தான் தேர்தல் நிற்பாங்களா’, ‘எங்க ஊர்ல கல்யாணத்துக்கு பொண்ணுங்க சம்மதம் கேட்க மாட்டோம், அப்படி கேட்டா ஒரு ஆம்பளைக்கும் எங்க ஊர்ல கல்யாணம் நடக்காது’ என உண்மை பேசும் வசனங்களை போகிற போக்கில் காமெடியாக்கியிருக்கிறார் டான் அசோக்!

கருத்தெல்லாம் சொல்ல வரல.., ரெண்டேகால் மணி நேரம் ஜாலியா ரசிச்சிட்டுப் போகலாம் என்பது தான் இயக்குநரின் திட்டம் போலிருக்கிறது. அதனாலேயே சீரியஸான காட்சியைக் கூட காமெடியாக்கி பக்கா ஃபெமிலி கலர்புல் எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார்.

0 593

‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’ வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் படம்.

படத்தின் டைட்டிலிலேயே இது எந்த மாதிரியான படமென்பதை யூகித்து விடலாம். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் நட்பின் மகத்துவத்தை ஒரு கோணத்தில் சொன்னவர், இதில் இன்னொரு புதிய கோணத்தை கையாண்டிருக்கிறார்.

இரண்டு காதல் ஜோடிகள்! அவர்களுக்குடையே ஏற்படும் நட்பு, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு ஆகியவை தான் இந்த ‘நட்பதிகாரம் 79.’

ராஜ்பரத்தும் தேஜஸ்வியும் ஒரு காதல் ஜோடி, அதேபோல அம்ஜத்கானும், ரேஷ்மிமேனனும் ஒரு காதல் ஜோடி. ஒரு நைட் பார்ட்டியில் சந்திக்கும் இந்த இரண்டு ஜோடிகளும் ஒருவர் தோளில் ஒருவர் கை போடுகிற நட்பாகி நெருக்கமாகிறார்கள்.

அந்த நெருக்கமான நட்பே ஜோடிகள் பிரிய வழி வகுக்கிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ராஜ்பரத்தும், அம்ஜத்கானும் நிஜ நண்பர்களைப் போலவே திரையிலும் ஜொலிக்கிறார்கள். ராஜ்பரத்தின் உசரமும், அசால்ட்டாக பேசும் டயலாக் டெலிவரியும் அவருக்கு கோடம்பாக்கத்தில் நல்ல இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதை காட்டுகிறது. இன்னொரு ஹீரோவான அம்ஜத்கான் ஒரு பணக்காரப் பையனின் கெத்தை இம்மி குறையாமல் காட்டியிருக்கிறார்.

மயிலாப்பூர் மாமியாக வரும் ரேஷ்மிமேனன் குடும்ப குத்து விளக்காக ஜொலிக்கிறார். எமோஷனல் காட்சியில் கூடுதல் அழகு!

முதல் காட்சியிலேயே ராஜ்பரத்திடம் சிகரெட்டை வாங்கி ஸ்டைலாக பற்ற வைக்கும் புதுமுக தேஜஸ்வி மாடர்ன் கல்ச்சரில் ஊறிப்போன பெண்ணாக வருகிறார். அதுவே இன்னொரு காட்சியில் ”நைட் கிளப்புக்கு வர்ற பொண்ணுன்னா கெட்டவன்னு அர்த்தமா?” என்று டயலாக் பேசி மேல்தட்டு பொண்ணுங்களுக்கும் கற்பு உண்டு என்பதை உணர்த்துகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், சுப்பு பஞ்சு, வினோதினி, விக்னேஷ் கார்த்திக் என படத்தில் வருகின்ற மற்ற கேரக்டர்களும் தங்கள் நடிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

தீபக் நீலாம்பூரின் இசையில் ராஜூசுந்தரம் ஆடும் குத்துப்பாட்டு தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை ஓ.கே ரகம். ஆர்.பி. குருதேவ்வின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமிலும் இளமை துள்ளல்!

அப்பாவை காப்பாற்றப்போன அம்ஜத்கான் சென்னை திரும்பியவுடன் காதலியிடம் அதைப்பற்றி பேசாதது, அதேபோல தேஜஸ்வியும் ராஜ்பரத்துக்கு திருமணம் என்று கேள்விப்பட்டதும் அதைப்பற்றி கேட்க முயற்சிக்காதது இந்த இரண்டு கேள்விகளும் படத்தை ரெண்டேகால் மணி நேரத்துக்கு இழுக்க முயற்சியோ என்று ரசிகர்களை வெளிப்படையாகவே யோசிக்க வைக்கிறது.

ராஜ்பரத்தும், அம்ஜத்கானும் சிக்னலில் அருகருகே காரில் இருந்தும் திரும்பி பார்க்காமல் செல்லுவதும் , நண்பன் முக்கியமா? காதலி முக்கியமா? போன்ற அறுதப்பழசான காட்சிகளுக்கு யோசிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் சாபு ஜோசப்.

காதலும், நட்பும் கை கோர்க்கும் படங்கள் தமிழ்சினிமாவுக்கு புதிதல்ல, அதை ‘பட்டி’ ‘டிங்கிரி’யெல்லாம் பார்த்து காலத்திற்கேற்ப மெருகேற்றியிருப்பது தான் திரைக்கதையின் சுவாரஷ்யம்!அந்த வகையில் தூய்மையான காதலுக்கும், தூய்மையான நட்புக்கும் இடையே எப்பேர்ப்பட்ட தடங்கல்கள் வந்தாலும் அதை மட்டுப்படுத்தி ஜெயிக்கிற வல்லமை உண்டு என்பதை இளமை பொங்கும் திரைக்கதை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரவிச்சந்திரன்.