Home Movie Reviews

0 770

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் எப்பவோ ஹீரோவாக அறிமுகமாகியிருக்க வேண்டிய படம். பைனான்ஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக தட்டுத் தடுமாறி ரிலீசாகியிருக்கிறது.

கல்வியை பொதுநலத்தோடு தர வேண்டிய தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் பேராசையில் எப்படியெல்லாம் சுயநலத்தோடு நடந்து கொள்கின்றன என்பதை புட்டு புட்டு வைக்கும் படமே இந்த ‘பென்சில்’.

மாநகரத்திலேயே பிரபலமான பள்ளியில் ஜி.வி.பிரகாஷ்குமாரும், ஸ்ரீதிவ்யாவும் படிக்கிறார்கள். அதே பள்ளியில் படிக்கும் பிரபல ஹீரோவின் மகனான ஹாரிக் ஹசன் செய்யாத சேட்டைகள் இல்லை. இதனால் ஹீரோ ஜி.வி பிரகாஷூக்கும், ஹாரிக் ஹசனுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

அதோடு அதே பள்ளியில் வேலை பார்க்கும் இரண்டு ஆசிரியர்களும் ஹாரிக் ஹசன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள்.

பிரபலமான ஹீரோவின் மகன் என்பதால் அவன் நமது பள்ளியில் படிப்பது நமக்குத்தான் பெருமை என்று பள்ளி நிர்வாகம் அவன் செய்கிற அட்டூழியங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விடுகிறது.

ஒருநாள் பள்ளிக்கு ஐ எஸ் ஐ தரச்சான்றிதழ் தருவதற்காக அதிகாரி ஊர்வசி ஆய்வுக்கு வருகிறார். அந்த நாளில் ஹாரிக் ஹசன் பள்ளியில் கொலை செய்யப்பட்டு கிடக்க, அவனை கொன்றது யார்? ஏன் என்பது தான் கிளைமாக்ஸ்.

பல மாதங்களாக கிடப்பில் இருந்த படமென்பதாலோ? என்னவோ? ஜிவியும் சரி, ஸ்ரீதிவ்யாவும் சரி படம் முழுவதிலும் ரொம்பவே இளமையாக காட்சியளிக்கிறார்கள்.

நடிப்பை ஸ்கிரீனில் காட்ட ரொம்பவே கஷ்டப்படுகிறார் ஜி.வி. ஆனால் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் ஹாரிக் ஹசனோ அசால்ட்டாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். சின்ன வயசு ரகுவரனை பார்த்தது போல இருக்கிறது ஹசனின் ஸ்கிரீன் பெர்பார்மென்ஸ்!

பள்ளிக்கூட யூனிபார்மில் இளமை தேவதையாக வருகிறார் ஸ்ரீதிவ்யா. படம் முடியவும் திணிக்கப்பட்ட பாடலில் கொள்ளை அழகில் சொக்க வைக்கிறார். இதைத்தாண்டி துப்பறியும் வேலையிலும் பளிச்சிடுகிறார்.

சுஜா வருணிக்கும், திருமுருகனுக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப் பொருத்தம் ஒட்டவே இல்லை.

என்னதான் நடிப்பில் தடுமாறினாலும் பின்னணி இசையில் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார் ஜி.வி. மனதில் ஒட்டாத பாடல்களில் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றன.

மகளை இழந்த சோகத்தை சொல்லி அபிஷேக் அழ வைத்தால், அந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வரும் அதிகாரி ஊர்வசியும், பள்ளியின் தாளாளரான டி.பி. கஜேந்திரனும் சிரிக்க வைக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு வரும் கொலைக் குற்றத்துக்கான குற்றவாளியை தேடும் காட்சிகளில் உள்ள நீளத்தை தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டியிருக்கலாம் எடிட்டர் ஆண்டனி.

இந்தக்கால பள்ளிக்கூட மாணவர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் ஒரு கொலை குற்றத்தை போலீஸ் லெவலுக்கு தனியாகவே துப்பறியக் கிளம்புவதெல்லாம் நம்பும்படி இல்லை.

கட்டணக் கொள்ளை, குழந்தைகளை பராமரிக்கும் லட்சணம், பிரபலமானவர்கள் வீட்டுக் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு, ஆசியர்களின் கள்ளக் காதல் என தனியார் பள்ளிகளில் நடக்கும் பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ்.

தனியார் பள்ளிகளில் நடந்த பல உண்மைச் சம்பவங்களின் மோசமான பக்கங்கள் தான் இந்தப்படம். கூடவே ‘கல்வியை வியாபாரமாக்கி விட வேண்டாம்’ என்கிற முக்கியமான கருத்தையும் வலியுறுத்துகிறது!

0 761

திணற திணற நடித்துக் கொட்டுவதில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா இரண்டு பேருமே சளைத்தவர்கள் இல்லை. இந்த இருவரும் ஒரே படத்தில் நடிப்பதைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அது எப்படிப்பட்ட ரகளையான ரசனையாக இருக்கும்.

அந்த சந்தர்ப்பத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கும் படம் தான் இந்த ‘கோ 2′.

அனாதையான ஹீரோ பாபி சிம்ஹாவை ஆளாக்கி சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்ட சமூக சேவகரான நாசரையும் அவரது மகனான கருணாகரனையும் தனது சுய லாபத்துக்காக தீர்த்துக் கட்டுகிறார் அமைச்சரான இளவரசு.

மீடியாவில் இருந்தும் கூட அமைச்சர் செய்த குற்றத்தை வெளிக்கொண்டு வர முடியாமலும், அதற்கான சரியான தண்டனை கிடைக்காத ஆத்திரத்திலும் இருக்கும் பாபி பதவியை வைத்துக் கொண்டு ஆட்டம் போடும் அமைச்சர் இளவரசுவுக்கு பாடம் புகட்டவும், அவரது அயோக்கியத்தனை வெளிச்சம் போட்டு காட்டவும் முடிவெடுக்கிறார்.

அதற்காக மாநில முதல்வரான பிரகாஷ்ராஜை கடத்துகிறார். அமைச்சர் செய்த அயோக்கியத்தனத்துக்கு ஏன் பாபி சிம்ஹா முதல்வரை கடத்துகிறார்? முதல்வர் பாதுகாப்பாக பாபி சிம்ஹாவிடமிருந்து தப்பித்தாரா? என்பதே இந்த ‘கோ 2′.

தனியார் டிவி சேனல் ஒன்றில் வேலை பார்க்கும் பாபி சிம்ஹா இதில் அகிம்சை வழியில் போராடும் ஹீரோவாக வருகிறார். ஜிகர்தண்டாவின் ‘அசால்ட்’ வில்லனாக பார்த்து விட்டவரை இப்படி அமைதியாக பார்ப்பது ரசிகர்களுக்கு புது ரசிப்பு அனுபவமாக இருக்கும்.

பாரதியார் கவித சொல்வது முதல் நல்ல தமிழை சிரமப்பட்டு உச்சரிப்பது வரை கொஞ்சம் தெலுங்கு வாடை வந்தாலும் அதை சரியாக பேலன்ஸ் செய்திருக்கிறார் பாபி சிம்ஹா.

நடிப்பில் கெட்டிக்காரர் தான். ஆனால் ரொமான்ஸிலும், டான்ஸிலும் மனுஷன் கஷ்டப்படுவது கண்கூடாகவே தெரிகிறது.

நாயகியாக வரும் நிக்கி கல்ராணி பாடல் காட்சிகளில் அழகுப் பதுமையாக வருகிறார். நடிப்புக்கு தீனி போடுகிற அளவுக்கு காட்சிகள் இல்லை என்றாலும் அதுவே போதும் என்றாகி விடுகிறது சில காட்சிகளில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்கள்.

காமெடிக்கு கேரண்டு தருகிறார் அமைச்சரின் மகனாக வரும் பால சரவணன். போலீஸ் விசாரணையில் தளபதி, காதல் தேசம் படக்காட்சிகளை கலந்து சொல்லி தப்பிக்கும் அவரது சாமர்த்தியம் செம கலாட்டா!

முதல்வராக வரும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வழக்கமான மிரட்டல் தான். ஆனால் அவரை விட நடிப்பில் எஸ்க்ட்ராவாக ஸ்கோர் செய்வது அமைச்சராக வரும் இளவரசு தான். முதல்வருக்கு விசுவாசியாக இருந்து கொண்டே அவருடைய முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு செய்யும் தில்லு முல்லு கை தட்டல் ரகம்!

சீரியஸ் போலீசாக வரும் ஜான் விஜய் பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும் கருணாகரன் கண்கலங்க வைத்து விடுகிறார்.

பிலிப் ஆர்.சுந்தர் – வெங்கட் என் இன் ஒளிப்பதிவும், லியோன் ஜேம்ஸ்சின் இசையும் படத்தின் வேகத்துக்கு பக்க பலம்.

மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசிக்கப்பட்ட கதையெல்லாம் இல்லை. பதவியை வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்த அமைச்சர் ஒருவரின் வண்டவாளங்களை மாநிலத்தின் முதல்வரை கடத்தி வைத்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே படம் என்று இரண்ரே வரியில் அடங்கி விடுகிற கதைக்களம் தான்.

ஆரம்பக் காட்சியே முதல்வரை கடத்துவது போல காட்டி விட்டு, அடுத்தடுத்து ரொமான்ஸ் – காமெடி என இடைவேளை வரைக்கும் இயக்குநர் ட்ராக்கை மாற்றி காட்சிகளை ஜவ்வாக இழுக்கிறார். இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையின் வேகம் சூடு பிடிக்கிறது.

கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தி படத்தை நீக்க கோரிக்கை வைப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் மத்திய மாநில அரசுகளை கேள்விகளால் துளைத்தெடுப்பது, டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசாங்கமே நடக்கிறது என ஆளும் அரசு செய்யும் மக்களுக்கு எதிரான விஷயங்களை தைரியமாக காட்சிப்படுத்தியிருப்பதற்கும் இயக்குநர் சரத்தை மனசார பாராட்டலாம்.

இப்போ இருக்கிற இளைஞர்களோட புரட்சி எல்லாம் ஃபேஸ்புக்ல எத்தனை லைக்ஸ் வாங்கினோம்னு பார்க்கிறதோட முடிஞ்சு போயிடுது போன்ற பாக்கிய ராஜ் – ராஜா ராம் இருவரின் சம்மட்டியடி வசனங்கள் கூடுதல் விறுவிறுப்பு.

பரபரப்பான இந்த தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் மக்கள் கேட்க வேண்டிய ‘நறுக்’ ‘சுறுக்’ கேள்விகள் அத்தனையையும் தைரியமாக கேட்கிறது இந்தப்படம்.

0 743

‘டைம் டிராவல்’ படம் என்றாலே ரசிகர்கள் கொஞ்சம் உஷாராகத் தான் பார்க்கப் பழக வேண்டும்.

ஏதோ அலர்ட் வந்திருக்கிறதே என்றும் கையில் இருக்கும் மொபைலை கன நொடி நோண்ட ஆரம்பித்தாலும், தலை நிமிர்ந்து பார்க்கும் அடுத்த நொடிக் காட்சி குழப்பத்தை தந்து விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட குழப்பங்களில் இதில் கம்மி என்பதே மனசுக்கு நிம்மதி.

1985 இல் வெளியான ‘Back To The Future’ ல் ஆரம்பித்து 2015 இல் ரிலீசான ‘Hot Tub Time Machine 2′ உட்பட ஹாலிவுட்டில் எக்கச்சக்க டைம் டிராவல் படங்கள் ரிலீசாகியிருக்கின்றன.

இந்த வகையறா படங்கள் அங்குள்ள ரசிகர்களுக்கு ரகளையான ரசனை தான். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு இது புது அனுபவம்.

ஷாம் நடித்த ’12 பி’, விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த ‘இன்று நேற்று நாளை’ படங்களுக்குப் பிறகு தமிழில் அதைவிட அதிக பொருட்செலவில் வந்திருக்கும் இன்னொரு ‘டைம் ட்ராவல்’ படம் தான் இந்த 24.

முழுப்படமும் புரியாவிட்டாலும் ‘ஆஹா… ஓஹோ…’ என்று ஹாலிவுட் படங்களை கொண்டாடுகிறோம். அந்த ‘கொண்டாட்ட’ மனநிலை ரசிகர்களுக்கு தமிழில் ஒரு ஹாலிவுட் தரத்திலான படம் தான் இந்த 24 என்றால் அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

படத்தின் முழுமைக்கும் தெரிகிற பிரமாண்டம், சூர்யா – சமந்தா லவ் சீன்களையே ரொமான்ஸ் வித் காமெடியாகக் கொண்டு சென்றது என ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு புது ‘சயின்ஸ் பிக்‌ஷன்’ அனுபவம் காத்திருக்கிறது.

கதை 1990 கால கட்டத்தில் ஆரம்பிக்கிறது…

மூத்தவர் ஆத்ரேயா மற்றும் இளையவர் சேதுராமன் அவரது மகன் மணி என மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார் சூர்யா. இதில் ஆத்ரேயா தம்பி சேதுராமனை விட மூன்று நிமிடங்கள் முன்னால் பிறந்தவர்.

பிரபல விஞ்ஞானியான சேதுராமன் கண்டுபிடிக்கும் ‘Project 24′ என்ற கடிகாரம் சைஸ் டைம் மிஷினை அவரிடமிருந்து கைப்பற்ற துடிக்கிறார் ஆத்ரேயா.

இதற்கான முயற்சியில் தனது தம்பியையும் அவரது மனைவி நித்யாமேனனையும் கொலை செய்ய, அதில் அவர்களுடையே ஒரே ஆண் குழந்தை மட்டும் தப்பிக்கிறது.

அவர் தான் இன்னொரு சூர்யாவாக வரும் மணி.

தம்பி குடும்பத்தை கொன்ற கையோடு ஒரு விபத்தால் 26 ஆண்டுகள் கோமாவுக்கு சென்று அதிலிருந்து மீளும் ஆத்ரேயா மீண்டும் அந்த டைம் மிஷினை தேடி அலைகிறார்.

அந்த டைம் மிஷினோ சென்னையில் 26 வருடங்களுக்குப் பிறகு இளைஞனாக இருக்கும் சேதுராமனின் மகன் சூர்யாவின் வாட்ச் கடைக்கு வந்து சேர்கிறது.

வாட்சைத் தேடி தனது இழந்த வாழ்க்கையை வாழ ஆசைப்படும் ஆத்ரேயா அதை கண்டுபிடித்துக் கொடுத்தால் 5 கோடி ரூபாய் பரிசு என்று விளம்பரம் கொடுக்க, ஆரம்பிக்கிறது பெரியப்பாவுடனான இளைய சூர்யாவின் மோதல்.

டைம் மிஷின் யார் கைக்குப் போனது? என்பதே கிளைமாக்ஸ்.

ஆத்ரேயா, சேதுராமன், மணி என மூன்று விதமான கெட்டப்புகளிலும் எவ்வளவு தூரத்துக்கு வித்தியாசம் காட்ட முடியுமோ? அவ்வளவு தூரத்துக்கு விதவிதமான முகபாவங்களில் வித்தியாசம் காட்டி அசரக்கிறார் சூர்யா.

ஆத்ரேயாவாக கொலை வெறியோடு அலையும் போதும் சரி, அதே ஆத்ரேயா வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு சைலண்ட்டாக காய்களை நகர்த்துவதிலும் சரி செம வில்லத்தனம்!

விஞ்ஞானி சேதுராமன் கெட்டப்பில் ஒரு அப்பாவி போல தோற்றம் தருகிறார். அதே சமயத்தில் வாலிபன் மணியாக வரும் சூர்யா ரொமான்ஸ் காட்சிகளில் பிரமாத்தப்படுத்துகிறார்.

அழகுப்புயல் சமந்தாவை மெல்ல மெல்ல தனது காதலில் விழ வைக்க டைம் மிஷினை வைத்து அவர் செய்யும் விளையாட்டுகள் என படம் முழுக்க சூர்யாவின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது.

சமந்தா எவ்ளோ அழகு! காட்டுகிற போதெல்லாம் முடிந்தவரை குளோசப்பில் காட்டி ரசிகர்களை கட்டிப் போடுகிறார்கள்.

நித்யாமேனனுக்கு சின்ன கேரக்டர் தான். அதற்கே அவர் நிஜத்தில் அழுதிருக்க வேண்டும். படத்தில் வருகிற குறைந்த காட்சிகளிலும் அதைத்தான் செய்கிறார்.

இளைய சூர்யா மணியின் வளர்ப்புத் தாயாக வரும் சரண்யா பொன்வண்ணன் அந்த கேரக்டருக்கு நல்ல பொருத்தம். அதிலும் தனது ப்ளாஷ்பேக்கை சூர்யா கேட்கும் போது ”யார் என்ன சொன்னாலும் நீ தாண்டா என்னோட மகன். 26 வருஷமா நான் உன்னை நெஞ்சில சுமந்திருக்கேண்டா” என்று சொல்லுகிற காட்சி கனம்.

கிரிஷ் கர்நாட், சத்யன், சார்லி, அப்புகுட்டி, சத்யன் என வரும் மற்ற கேரக்டர்களில் சத்யன் கேரக்டர் மட்டுமே காமெடியில் சிரிக்கவும், கொஞ்ச நேரமாவது திரையிலும் வந்து போகிறார்.

படத்தின் பிரம்மாண்டத்துக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடு கொடுக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை. ‘நான் உந்தன் அருகினிலே’ டூயட் பாடல் கேட்ட மாத்திரத்திலேயே ஹம் பண்ண வைத்து விடுகிறது. இருந்தாலும் பாடல்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் ரஹ்மான் சார்…

ஒவ்வொரு சூர்யாவுக்கும் கேமராவில் காட்டப்படும் வித்தியாசம் மேம்போக்காக இல்லாமல் மிகவும் பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டு பக்கமும் மரங்கள் சூழ நடுவில் செல்லும் ரயிலை மேலிருந்து காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஹாலிவுட் தரத்தை தனது கேமராவுக்குள் கொண்டு வந்து விடுகிறார்.

கிரிக்கெட் ட்ரிக், பைக் பன்சர், வில்லனை சூட் செய்ய, தோட்டாவை ப்ரீஸ் செய்வது, மழைத் துளிகளை ப்ரீஸ் செய்து அதை விரலால் சூர்யா தட்டி விடும் அழகு என தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு கை தட்டி பாராட்ட வேண்டிய உழைப்பு.

”நான் ஒரு வாட்ச் மெக்கானிக்.., எங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்…” என அதிகம் யோசிக்கப்படாத ரீபிட் வசனங்களை வைத்தே சூர்யா – சமந்தா ரொமான்ஸ் காட்சிகளை ஒப்பேத்தியிருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார்.

‘யாவரும் நலம்’ என்ற ஷார்ப்பான படத்தை தந்த இயக்குநரின் படமா இது? என்கிற கேள்வி எழாமல் இருக்காது. அதில் இருந்த நேர்த்தியும், விறுவிறுப்பும் கத்தரி போடாமல் நீளும் காட்சிகளால் இந்தப் படத்தில் அதன் தேவையை உணர்த்துகிறது.

ப்ரேமுக்கு ப்ரேம் பிதுங்கி வழிகிறது பிரம்மாண்டம். ஹாலிவுட் படங்களை ஆஹா… ஓஹோ… என்று புகழும் மனநிலை கொண்ட ரசிகர்களுக்கு தமிழிலும் ஒரு ஹாலிவுட் லெவல் ‘சம்மர் ட்ரீட்’ தான் இந்த 24!

0 745

அநியாயமாக சொத்தை அபகரித்தவனிடமிருந்து அதை மீட்பதற்காக ஒட்டு மொத்த குடும்பமும் நின்று நிதானமாக விளையாடுவது தான் இந்த ‘களம்’.

அடுத்தவர்களின் சொத்துகளை மிரட்டியே ஆட்டையைப் போடும் பலே லோக்கல் ரியல் எஸ்டேட் ரெளடி மதுசூதன்.

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வசிக்க வரும் அவருடைய மகன் ஹீரோ அம்ஜத்துக்கு ஒரு பழைய பங்களாவையும் சீப்பாக முடிக்கிறார்.

அந்த பங்களாவுக்கு குடிபோகும் அம்ஜத்தும், அவரது மனைவி லட்சுமி ப்ரியாவும் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களால் அதிர்ச்சியடைகிறார்கள்.

அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாகவும், அவைகளை விரட்டினால் சரியாகி விடும் என்றும் வீட்டுக்கு வரும் இளம் பெண் ஓவியரான பூஜா மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

உடனே அந்த பேயை விரட்ட மந்திரவாதி சீனிவாசனின் உதவியை நாடுகிறார்கள். வீட்டை விட்டு பேய்கள் வெளியேறியதா? அல்லது அம்ஜத் தனது குடும்பத்தோடு அந்த பங்களாவை விட்டு வெளியேறினாரா? என்பதே கிளைமாக்ஸ்.

லைட்டுகள் அணைந்து அணைந்து எரிவது, நள்ளிரவானால் திடீரென்று சத்தம் கேட்பதும், அதைக் கேட்டு நாயகி முழிப்பு வந்து சத்தம் வந்த இடத்தை நோக்கிப் போவது, குளிக்கும் போது ஷவரில் ரத்தம் வருவது என வழக்கமான பேய் வகையறா படங்களில் இருக்கும் சமாச்சாரங்கள் ஆங்காங்கே வரிசைக்கட்டி வந்தாலும் கிளைமாக்ஸில் வரும் அந்த ட்விஸ்ட் மொத்த படத்தையும் தரப்படுத்தி விடுகிறது.

ஹீரோ அம்ஜத்தும், ஹீரோயின் லட்சுமி ப்ரியாவும் ஒரு குழந்தையோடு கணவன், மனைவியாகவே அறிமுகமாவதால் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் என்று எதுவுமில்லை. பல படங்களில் நாயகி பேயைப் பார்த்து பயந்து நாயகனிடம் சொல்லவும் அவர் நம்ப மாட்டார். பிறகு அவருக்கே அப்படி ஒரு அனுபவம் வரும்போது நம்புவார். அப்படி ஒரு கதாபாத்திரம் தான் ஹீரோ அம்ஜத்துக்கு. கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இரவுக் காட்சிகளில் கண்களில் பயத்தை வைத்துக் கொண்டே ஒவ்வொரு அறையாக போகும்போதும் சரி, மாடிப்படிகளில் பயத்துடன் கீழே இறங்கும் போதும் சரி முகத்தில் பயத்தை அளவாக காட்டியிருக்கிறார் லட்சுமி ப்ரியா.

மாடர்ன் ஓவியராக வரும் பூஜாவும், மந்திரவாதியாக வரும் சீனிவாசனும், வேலைக்காரியாக வரும் கனி ஆகியோர் அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும் கிளைமாக்ஸில் அவர்களுக்கான முக்கியத்துவத்தை இயக்குநர் வலுவாக கொடுத்திருக்கிறார். மேஜிக் மேனாக வரும் நாசர் அதைப்போலவே சில நொடிகளில் படத்திலிருந்தும் மறைந்து போகிறார்.

விஜய் சேதுபதியின் ‘பீட்சா’ படத்தை ஞாபகப்படுத்துகிற கதை! இருந்தாலும் ஒளிப்பதிவு, கலை, பின்னணி இசை என டெக்னிக்கல் விஷயங்களால் படத்தை சுவாரஷ்யப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரே ஒரு பங்களா, அதற்குள்ளே நடக்கும் சம்பவங்கள் என கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள் வரை அநியாயத்துக்கு மெதுவாக நகர்கிறது படம். இருந்தாலும் ஒளிப்பதிவு, கலை, பின்னணி இசை என டெக்னிக்கல் விஷயங்களில் எக்ஸ்ட்ராவாக கவனம் செலுத்தி அந்த ஸ்லோமோஷனை சுவாரஷ்யப்படுத்தியிருக்கிறார்கள்!

ரசிகர்கள் யூகிக்க முடியாத ட்விட்டை வைத்து புத்திசாலித்தனத்தை காட்டிய இயக்குநர் ராபர்ட் ராஜ் படம் முழுமைக்கும் அதை காட்டியிருந்தால் வெற்றியும் முழுமையாக கிடைத்திருக்கும்.

0 721

சென்னை,மே01 (டி.என்.எஸ்) அழகு, கற்பனை, அரிதாரம், பிரம்மாண்டம் என்று பொய்யான விஷயங்களை தவிர்த்துவிட்டு, மனித வாழ்க்கையை அதிலும், சினிமாக்காரர்கள் சொல்ல மறந்த மனிதர்களின் வாழ்க்கையை சொல்லியிருக்கும் படமே ‘சாலையோரம்’.

துப்புரவு பணி செய்யும் தொழிலாளியான நாயகன் ராஜ், பிள்ளாஸ்டிக் கழிவுகளால், பல ஆண்டுகளாக குவிந்து வரும் குப்பைகளை அகற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாயகி ஷெரினாவுக்கு உதவி செய்கிறார். பணக்கார பெண்ணாக இருந்தாலும், அனைவருடனும் பாகுபாடு இன்றி பழகும் ஷெரினாவை ராஜ் ஒரு தலையாக காதலிக்க, ராஜியை அவரது குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்.

ராஜியின் காதல் விவகாரம் தெரியாத ஷெரினாவோ தனது ஆராய்ச்சியில் முழு கவனத்தை செலுத்தி வர, அவரது ஆராய்ச்சியை வெளிநாட்டுக்கு விற்று பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார் அவரது கார்டியனான பாண்டியராஜன்.

இதற்கிடையில், ராஜியின் காதல் விவகாரத்தை ஷெரினா தெரிந்துக்கொள்ள, அதே சமயம் தனது ஆராய்ச்சியை தனது கார்டியன் பணத்திற்காக அபகரிப்பதையும் அறிந்துக்கொள்கிறார். இறுதியில் தனது ஆராய்ச்சியை பாண்டியராஜனிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லையா, ராஜியின் காதலை ஏற்றாரா அல்லது ராஜு, தன்னை காதலிக்கும் பெண்ணை ஏற்றாரா, என்பதே மீதிக்கதை.

நாயகன் ராஜ், நாயகி ஷெரீனா இருவரும் புதுமுகங்களாக இருந்தாலும், தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். நிஜமான குப்பை மேட்டி டூயட் பாடிய இவர்களுக்கு ஆயிரம் பொக்கே கொடுத்தாலும் போதாது.

சிரிப்புக்கு சிங்கம் புலி உத்தரவாதம் கொடுக்க, முத்துக்காளை குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார். வில்லனாக நடித்துள்ள பாண்டியராஜன் உள்ளிட்ட படத்தில் நடித்த சில முகங்கள் புதிதாக இருந்தாலும், தங்களது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

மரியா மனோகரின் பின்னணி இசையும், எஸ்.சேதுராமின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகங்கள். தினேஷ் ஸ்ரீநிவாஸின் கேமரா குப்பை மேட்டை சுவிட்சர்லாந்து பணி மலையாக பீல் பண்ணி படமாக்கியிருக்கிறது.

காதல், காமெடி, ஆக்‌ஷன் என்று ரெகுலர் கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருந்தாலும், அவற்றை வைத்து சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ரொம்ப நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.மூர்த்திக்கண்ணன்.

சினிமா என்ற மாபெரும் ஊடகத்தில், சமூக அக்கறையுடன் படம் எடுக்கும் ஒரு சில இயக்குநர்களின் பட்டியலில் இயக்குநர் கே.மூர்த்திகண்னனும் முக்கிய இடத்தை வாங்கிக் கொடுக்கும் இந்த ‘சாலையோரம்’.

0 681

தமிழுக்காக சில எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளைப் போட்டு ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்துக்கு கியாரண்டி தந்திருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்.

பொள்ளாச்சியில் வக்கீல் தொழில் செய்து வரும் உதயநிதிக்கு நாயகி ஹன்ஷிகா முறைப்பெண். என்னதான் முறைப்பெண்ணாக இருந்தாலும் உப்புக்கு உதவாத லாயர் என்கிற கெட்ட பெயர் எடுத்தவருக்கு எப்படி பெண் கொடுப்பார் ஹன்ஷிகாவின் அப்பா?

இதனாலேயே ”பெரிய லாயராகிக் காட்டுகிறேன்” என்கிற வெறியோடு சென்னைக்கு வருகிறார் உதய். அங்கு அதே லாயர் தொழில் செய்யும் மாமா விவேக்குடன் இணைந்து ஏதாவது வழக்கு சிக்காதா என்று தேடுகிறார்.

அந்த நேரத்தில் தான் ஒரு பணக்கார வீட்டுப் பையன் ப்ளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளிகள் மேல் காரை ஏற்றிக் கொன்ற வழக்கு பொது நல வழக்காக நீதிமன்றதுக்கு வருகிறது. இந்தியாவிலேயே பிரபலமான வக்கீலான பிரகாஷ்ராஜ் தனது வாதத்திறமையால் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பணக்கார இளைஞனை காப்பாற்றுகிறார்.

ஆனால் மூளையை உறுத்தும் அந்த வழக்கை மீண்டும் பொது நல வழக்காக விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் உதயநிதி.

அடுத்தடுத்து வருவது எல்லாமே சூடு பிடிக்கும் ‘சீட்டு நுனி’ காட்சிகள்… பிரகாஷ்ராஜை எதிர்த்து உதயநிதி ஜெயித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

உதயநிதி நடித்ததே அரை டஜன் படங்கள் தான். ‘கெத்து’வில் சந்தானம், டாஸ்மாக் காம்போவுக்கு குட்பை சொன்ன உதயநிதி இதில் தன்னை அடுத்த லெவலுக்கு அப்கிரேடு செய்திருக்கிறார். கேரக்டராக மட்டுமல்ல, சோலோ ஹீரோவாகவும் முழுமையாக ஜெயித்திருக்கும் உதயநிதிக்கு இது இன்னொரு ஹாட்ரிக் ஹிட்! பொதுநலத்தோடு யோசிக்கிற சாதாரண மனிதராக வரும் அவர் வக்கீல் கேரக்டரில் மிக இயல்பாக பொருந்திப் போகிறார்.

விட்டால் நொடிப்பொழுது நடிப்பில் கூட தூக்கிச் சாப்பிட்டு விடுகிற பிரகாஷ்ராஜ் உடன் உதயநிதி கோர்ட் வாதாடும் காட்சிகளில் மொத்த தியேட்டரும் சைலண்ட் மோடுக்கு போய் படத்தோடு ஒன்றி விடுகிறது.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் ஹன்ஷிகாவை துரத்தி துரத்தி காதலித்த உதய் இதில் அவருக்கு முறைப்பெண்ணாக புரமோஷன் கொடுத்திருக்கிறார். தேவைப்பட்ட இடங்களில் அளவோடு நடிக்கிறார். தேவைப்படுகிற காட்சிகளில் உதயநிதியோடு டூயட் பாடுகிறார். அதைத்தாண்டி அவரது கேரக்டரை இழுக்காமல் விட்டுருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

இந்தியாவின் பிரபல வக்கீலாக வருகிறார் பிரகாஷ்ராஜ். அவரது நடிப்பை சிலாகிக்காமல் இருக்க முடியுமா? கேப் கிடைக்கிற இடங்களில் எல்லாம் கோல் போடுகிறார் மனுஷன். ஒரு மூத்த வக்கீலுக்கான தோரணையோடு அவர் கோர்ட்டுக்குள் நுழையும் போதே ஏற்படுகிற பரபரப்பு படம் முடியும் வரை அது தொடர்கிறது.

படத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய இன்னொரு நடிகர் நீதிபதியாக வரும் ராதாரவி. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அவர் செய்யும் மேனரிஸங்கள் நீதிபதிகளுக்கே உரிய மிடுக்கு. ”இங்க யாரு குற்றவாளின்னு எனக்கு மட்டுமில்ல இங்க இருக்கிற எல்லாருக்குமே தெரியும். ஆனா என்ன பண்றது சாட்சிகள் சொல்றதை வெச்சுத்தானே நாங்கெல்லாம் தீர்ப்பு சொல்ல வேண்டியிருக்கு” இந்திய நீதித்துறையில் அவலத்தை சொல்கிற இடத்தில் கைத்தட்டல்களை அள்ளிக்கொள்கிறார்.

டிவி சேனல் நிருபராக சின்ன கேரக்டரில் வந்தாலும் அதிலும் முக்கியத்துவத்தோடு தான் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காமெடிக்கு விவேக்! அதிகம் சிரிக்க வைக்கவில்லை என்றாலும், வருகிற காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். மதியின் ஒளிப்பதிவில் கோர்ட் வளாக நிகழ்வுகளை மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதோடு பாடல் காட்சிகளிலும் எக்ஸ்ட்ரா அழகு!

காதை கிழித்தெடுக்கிற ரகமாகத்தான் இருக்கிறது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. இதுபோன்ற வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிற படங்களில் கூட தேவையில்லாமல் பின்னணியில் இசையை ஓட விடுவதை தாங்க முடியவில்லை. பாடல்களும் ஏற்கனவே கேட்ட அவர் போட்ட மெட்டுகள் தான்.

அஜயன்பாலாவின் ஆழமான வசனங்கள் நீட்டி முழக்காமல் அளவெடுத்தது போல சின்னச் சின்னதாய் தீப்பொறி பறக்கிறது.

‘விதி’ படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்திருக்கும் ஒரு பரபரப்பான வழக்கு, வக்கீல்களின் வாதத்திறமை என ரசிகர்களின் ரசனைக்கு செமத்தியாக தீனி போடுகிற படம்!

0 693

வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீனி. அதனை தொடர்ந்து மதராசப்பட்டினம், வேலூர் மாவட்டம், தாண்டவம் மற்றும் தலைவா திரைப்படங்களில் தன் நிலையான கதாப்பாத்திரிங்களால் மக்களின் நெஞ்சங்களில் பதிந்த இவர், தற்போது களம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். மேலும், சினிமாவின் மீது எல்லையற்ற காதல் கொண்ட ஸ்ரீனி புகழ்மிக்க இயக்குனர்கள் P வாசு, ஜான் மகேந்திரன் (சச்சின்) மற்றும் காலம் சென்ற தாம் தூம் புகழ் ஜீவா ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. “இணை இயக்குனராக நான் வாய்ப்பு தேடி சென்ற போது தான் என்னை நடிப்பதற்கு தேர்வு செய்தனர். அப்படி தான் நான் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானது. ஏற்கனவே நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவங்கள் எனக்கு நடிப்பதற்கு கை கொடுத்து உதவியது.”

“ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் யூ டர்ன் ஏற்படும். அப்படி என்னுடைய வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது தலைவா திரைப்படம். நடிப்பு என்னும் வார்த்தைக்கு முழு அர்த்தத்தை எனக்கு கற்று கொடுத்தது இளையதளபதி விஜய் சார் தான்.நான் சிறு வயதில் இருந்தே அவருக்கு தீவிர ரசிகன். தலைவா படப்பிடிப்பில் அவரை நெருக்கத்தில் பார்த்த பிறகுதான் அவர் இந்த உச்சத்துக்கு வர காரணம் என்ன என்பதை உணர்ந்துக் கொண்டேன். எந்த வேலை செய்தாலும் அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதின் பாலப் பாடத்தை கற்றுக் கொண்ட தருணம் இது. விஜய் சார் பயின்ற லயோலா கல்லூரியில் தான் நானும் படித்தேன் என்பதையே பெருமையாக சொல்லி திரிந்த நான், அவருடன் நடிக்கும் பொது எப்படி பெருமை பட்டு இருப்பேன் தெரியுமா. நல்ல நடிகன் என்று பெயர் வாங்கி அவருக்கு பெருமை சேர்ப்பேன் ” என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறுகிறார் ஸ்ரீனி.

படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில், ” களம் திரைப்படத்தின் கதையை கேட்ட அடுத்த நொடியே இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதையம்சம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேலும் என்னுடைய கதாப்பாத்திரம் நம்பகத்தன்மையாக அமைய வேண்டும் என்பதற்காக நான் எதார்த்தமாகதான் நடிக்க வேண்டும் என்றுக் கூறினார், நானும் அவ்வாறே செய்தேன். அதன் பலனையும் படத்தின் பிரத்தியேகக் காட்சியில் படம் பார்த்தவர்கள் பார்த்து பாராட்டும் போது அடைந்து விட்டேன் ” என்றார்.

ஒரு திகில் படத்தின் கதாநாயகன் நிஜ வாழ்க்கையில் பேய்களுக்கு பயந்தவர் என்பது யாரும் அறியாத உண்மை. ” படத்தில் அகோரி வேடத்தில் நடிக்கும் நான், என் வாழ்நாளில் இதுவரை ஒரு பேய் படங்களை கூட தனியே அமர்ந்து பார்த்ததில்லை; ஆனால் களம் படத்தில் நடித்த பிறகு அந்த பயம் சற்று மறைந்துள்ளது” என்று புன்னகையுடன் கூறுகிறார்.
” களம் திரைப்படம் மூலம் வளர்ந்து வரும் திறமையாளர்களான கதை ஆசிரியர் சுபிஷ் சந்திரன், இயக்குனர் ராபர்ட் ராஜ், ஒளிப்பதிவாளர் முகேஷ் மற்றும் இசை அமைப்பாளர் பிரகாஷ் நிக்கி ஆகியோருடன் கைகோர்த்தது எனக்கு புது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருகிறது. படத்தின் சிறப்பு காட்சி, பிரபலங்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று இருப்பதை நினைக்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்கு அஸ்திவாரமாக இருந்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் ஸ்டுடியோஸ் மதன் சார் அவர்களுக்கு எங்கள் களம் திரைப்பட குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார் ஸ்ரீனி. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உருவாக்கிய இந்த திகில் திரைப்படம் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகிறது.

0 543

நட்சத்திர அந்தஸ்து இல்லாத சில படங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்துவிட்டால் கண்டிப்பாக ஏமாறாமல் போக மாட்டார்கள் என்று சொல்லக் கூடிய சில படங்களும் வருகின்றன.

இந்த ‘என்னுள் ஆயிரம்’ படத்தை அந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ஒரு சுவாரசியமான கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், திரைக்கதையில் மட்டும் சில துண்டு துண்டான காட்சிகளையும், குழப்பமான தொடர்பில்லாத காட்சிகளையும் வைத்து கொஞ்சம் குழப்பி விட்டார். அதைத் தவிர்த்திருந்தால் ஆறாயிரம் படங்கள் வந்த தமிழ் சினிமாவில் இந்த ‘என்னுள் ஆயிரம்’ படமும் ஒரு குறிப்பிடத்தக்க படமாக அமைந்திருக்கும்.

ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலை பார்க்கும் மகாவுக்கும், வங்கியில் வேலை பார்க்கும் மரீனா மைக்கேலுக்கும் இடையே காதல். இந்தக் காதல் திருமணத்தில் முடியாமல் போவதற்கு மகா-வே காரணமாக அமைகிறார். அது என்ன என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.

நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகா இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே நெகட்டிவ் ஹீரோவாக அறிமுமாகத் தைரியம் வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். தொடர்ந்து நாயகனாக நடிக்க தன் தோற்றத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

படத்தில் இரண்டு நாயகிகள், மகாவின் காதலியாக நடித்திருக்கும் மரீனாவும் சரி, மகா ‘ஆசைப்படும்’ நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி யுகலும் சரி அவரவர் கதாபாத்திரங்கள் மிக யதார்த்தமாக சினிமாத்தனம் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் மூவரைச் சுற்றியே முழு படமும் நகர்வதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவமில்லை.

கோபி சுந்தர் பாடல்களில் செலுத்திய கவனத்தை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தில் பல இரவுக் காட்சிகள், அதிசயராஜ் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளையும் கவனத்துடன் கையாண்டிருக்கிறது.

0 546

புதுசா எதையாவது முயற்சி பண்ணப் போய் எசகு பிசகாக மாட்டிக்கொள்கிற ரகமாகத் தான் ‘தாரைதப்பட்டை’யில் ஆகி விட்டிருந்தார் சசிகுமார்.

நல்ல வேளையாக அறிமுக இயக்குநர் வசந்தமணி மீண்டும் அவரை அவருக்கான ரூட்டிலேயே கூட்டி வந்து விட்டுருக்கிறார்.

என்ன இதில் கொஞ்சம் ஓப்பனிங் சாங் பில்டப், உட்பட சில மாற்றங்களை மட்டுமே செய்து அக்மார்க் சசிகுமாரின் படமாகவே வந்திருக்கிறது இந்த ‘வெற்றிவேல்’.

ஊரில் படிக்காமல் உரக்கடை வைத்திருக்கும் சசிக்கு அதே ஊரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் படிக்க வரும் மியா ஜார்ஜை பார்த்தவுடன் காதல் வருகிறது.

விவசாயம் சம்பந்தமாக டவுட்டுகளை கேட்கப் போகிறேன் கல்லூரிக்குள் நுழைகிறவர் அடுத்தடுத்து பால்களைப் போட்டு மியாவின் காதலை வாங்கி விடுகிறார்.

”அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதை பார்க்கப் போகிறேன். வருவதற்கு பத்து நாட்கள் ஆகும்” என்று சொல்லி விட்டுப் போகிறார் மியா ஜார்ஜ்.

அந்த இடைவெளியில் சசி தன் தம்பியின் காதலுக்கு உதவப்போய் ஆரம்பமாகிறது பிரச்சனை?

அதே ‘நாடோடிகள்’ கோஷ்டியை களமிறக்கி தம்பி காதலிக்கும் பெண்ணை கடத்தச் சொல்ல, பெண் மாறிப்போகிறார்.

”இன்னும் மூணு நாள்ல எனக்கு கல்யாணம். என்னை ஊர்ல என்ன நெனைப்பாங்க?” என்று பரிதாபத்தோடு கேட்கிறார் கடத்தப்படும் இன்னொரு நாயகி நிகிலா.

தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக அவளையே திருமணம் செய்ய வேண்டிய நிலை சசிகுமாருக்கு! பத்து நாட்கள் கழித்து திரும்பி வரும் மியா ஜார்ஜ் சசியின் ப்ளாஸ்பேக்கை கேட்டு கண்களில் கண்ணீரோடு நிற்கிறார். மியாவின் காதல் என்னவானது? திட்டமிட்டபடி சசிகுமார் தம்பியின் காதல் நிறைவேறியதா? என்பதே கிளைமாக்ஸ்.

படம் முழுக்க ‘தேவர் மகன்’ படத்தின் வாடை வீசுவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் தனது நேர்த்தியான திரைக்கதையால் சரி விடுங்க… என்று ரசிகர்களை சமாதானம் சொல்லிக்கொள்ள வைத்து விடுகிறார் இயக்குநர்.

‘வெற்றிவேல்’ ஆக வரும் சசி வேட்டி, சட்டையில் கன கச்சிதம். ரஜினி லெவலுக்கு ஓப்பனிங் சாங் வைத்து பில்டப்பெல்லாம் கொடுத்தாலும் வில்லனிடம் வாங்கிக் கட்டுகிற காட்சிகளில் கதைக்காக கொஞ்சம் ஹீரோவுக்கான கெத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

அவரது காதலியாக வரும் மியா ஜார்ஜ் கேரள பெண்ணாகவே படத்திலும் வருகிறார். ”முத்தல் முகம்” அப்பட்டமாக ஸ்க்ரீனில் தெரிந்தாலும், சசிக்கு காதலி என்பதால் மன்னித்து விடலாம். பட் அவர்களுக்கிடையே உள்ள காதலில் புதுமை என்று எதுவுமில்லை.

சசியின் திடீர் மனைவியாக வரும் நிகிலா சில காட்சிகளில் கண் கலங்குகிறார். திருமணத்துக்குப் பிறகு சசியே உயிர் என மெல்ல மெல்ல அவரை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் குடும்பப் பெண்ணாக நம்மை ஈர்க்கிறார்.

சசியின் தம்பியாக வரும் ஆனந்த் நாக்- அவருடைய காதலி வர்ஷா இளவட்ட காதலால் இரண்டு குடும்பங்கள் சந்திக்கும் சாதிப் பிரச்சனைகளை காட்டியிருக்கிறார்கள்.

சமுத்திரக்கனி விஜய் வசந்த் உள்ளிட்ட ‘நாடோடிகள்’ கோஷ்டி இதில் பெண்ணை கடத்துகிற காட்சியில் சீரியஸாக வந்து, பின்னர் காமெடி பீஸ் ஆகி விடுகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே கம்பீரத்துடன் வரும் பிரபு கிளைமாக்ஸில் ”ப்ளீஸ் என் பொண்ணை காப்பாத்துங்க…” என்று ஹீரோவிடம் வந்து நிற்கும் காட்சியில் வெயிட் இறங்கி விடுகிறார்.

வில்லியாக வரும் விஜி கிராமத்து பொம்பளைக்கே உரிய அதே பழி வாங்கும் எண்ணத்துடனும், வைராக்கியத்துடனும் இருப்பது மிரட்டல்.

ஒரு இளம் பெண்ணை கட்டிக்கொண்டு அவளை நான்கு பேரிடமிருந்து பாதுகாக்க தம்பி ராமையா படுகிற பாடு அத்தனையும் காமெடிக்கு கியாரண்டி!

டி.இமானின் இசையில் வழக்கமான அதே பின்னணி அடி, அதே கேட்டு கேட்டு சலித்துப் போன ட்யூன்கள்! ஆனாலும் ரசித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் மனசுக்கு இதம்.

வசந்தமணியின் வழக்கமான கிராமத்து பின்னணி திரைக்கதையில் சிலாகிக்க ஒன்றுமில்லை, என்றாலும் அங்கங்கே சில ட்விஸ்ட்டுகளை வைத்து ரசிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

0 539

விஜய் – அட்லி இவர்களுடன் வில்லனாக பிரபல இயக்குநர் மகேந்திரன் அறிமுகம். இந்த காம்போவே ‘தெறி’ மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எகிறி விட்டிருந்தது.

ஒரு அரசியல்வாதிக்கும், ஒரு ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கின்ற மோதலும், அதற்கிடையே சமந்தாவுடனான விஜய்யின் காதலும், விஜம் மீதான எமி ஜாக்சனின் ஏக்கமும் தான் இந்த ‘தெறி’.

தனது ஒரே மகளான நைனிகாவுடன் கேரளாவில் பேக்கரி நடத்திக் கொண்டே அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் விஜய்.

மகளை எப்போதுமே ஸ்கூலில் லேட்டாக கொண்டு போய் விடுவதே வாடிக்கையாக வைத்திருக்கும் விஜய்க்கு பதிலாக ஒருநாள் நைனிகாவை அவளது ஸ்கூல் டீச்சரான எமி ஜாக்சனே தனது ஸ்கூட்டியில் கூட்டிப் போகிறார். போகிற இடத்தில் நைனிகாவுக்கு சிறிய விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்படுகிறார்.

லோக்கல் ரவுடியால் வருகிற அந்த பிரச்சனையில் அமைதியாக சென்று விட்டாலும் விடாது கருப்பாக வில்லன் கோஷ்டி விஜய்யுடம் மோதுகிறார்கள். அப்போது தான் அவர் ‘பாட்ஷா’ ரஜினி ஸ்டைலில் சாதாரண ஆள் இல்லை அவருக்கு இன்னொரு பயங்கரமான ப்ளாஷ்பேக் இருப்பது தெரிய வருகிறது.

டெல்லி நிர்பயா மாதிரி ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளம் பெண்ணை அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் கற்பழித்து கொன்று விட, பதிலுக்கு போலீஸ் அதிகாரியான விஜய் மகேந்திரனின் மகனை அதே பாணியில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்து கொன்று விடுகிறார்.

மகனை இழந்த மகேந்திரன் தனது மகனை கொன்றவனை பழி வாங்கத் துடிக்க, அது விஜய் தான் என்று தெரிய வரவும் விஜய் குடும்பத்தையே பழி வாங்குகிறார். அந்த மோதலில் விஜய் மட்டும் தன் மகளுடன் தப்பித்து விட, அதே விஜய் தான் கேரளாவில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் என்று தெரிய வருகிறது.

மிச்சமிருக்கும் விஜய் மற்றும் அவரது மகளை போட்டுத் தள்ள மீண்டும் வருகிறார் மகேந்திரன். இந்த பழி வாங்கும் போட்டியில் கிளைமாக்ஸில் ஜெயித்தது யார்? என்பதே கதை.

பேபி….. என்று நைனிகா கூப்பிடவும் விஜய்யின் எண்ட்ரி செம மாஸ் ஆன எண்ட்ரி! தியேட்டரில் விசில் சத்தம் அடங்க இரண்டு நிமிடங்கள் ஆகிறது. மூன்று விதமான கேரக்டர்களில் தனது வழக்கமான ஆக்டிங், சுவிங்கம்மை வாயில் போடும் ஸ்டைல், ஜித்து ஜில்லாடியில் டான்ஸ், ஆக்‌ஷன்ஸ் என வருகிற சீன்களில் எல்லாம் படத்தின் டைட்டிலைப் போலவே ‘தெறி’க்க விடுகிறார் விஜய்!

யாருக்கும் பயப்படத நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டரில் காஸ்ட்யூமில் அப்படி ஒரு கன கச்சதம். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் மிரள வைக்கும் மிடுக்கு! ஆக்டிங், ஸ்டைல், டான்ஸ், ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி என வருகிற சீன்களில் எல்லாம் படத்தின் டைட்டிலைப் போலவே தியேட்டரை ‘தெறி’க்க விடுகிறார் விஜய்!

இரண்டு நாயகிகளில் டாக்டராக வரும் எமி ஜாக்சன் மலையாள டீச்சராக வருகிறார். தலையில் டோப்பாவை வைத்துக் கொண்டு சோடாபொட்டிக் கண்ணாடியை போட்டுக் கொண்டு வந்தாலும் கேமரா வழியாக எமியின் அசரடிக்கும் அழகு மட்டுமே ரசிகர்களை ஈர்க்கிறது. மற்றபடி அவரது டீச்சர் கேரக்டரில் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. டாக்டராகவும், விஜய்யின் காதலி பின் மனைவியாகவும் வரும் சமந்தாவுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லி.

விஜய்யின் பக்கா ஆக்‌ஷன் எண்டர்டெயினர் என்பதையும் தாண்டி மாமியார் – மருமகள் உறவு, மாமனார் – மருமகன் உறவு என ஃபேமிலி ரசிகர்களையும் தியேட்டருக்கு வர வைக்கிறார் இயக்குநர் அட்லி. ராதிகா – சமந்தா உடனான உரையாடலும், விஜய் – சமந்தாவின் அப்பா உடனான உரையாடலும் நெகிழ வைக்கும் காட்சிகள்!

படத்தில் காமெடிக்கென்று தனியாக யாருமில்லை என்கிற உணர்வே தெரியாமல் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள் விஜய், சமந்தா, ராதிகா, கூடவே நைனிகாவும்! அதிலும் விஜய்யை நைனிகா கலாய்க்கிற இடங்கள் அருமை. இதுபோதாதென்று விஜய் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணியும் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகின்றன.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கும் மீனாவின் மகள் நைனிகாவின் டயலாக்ஸ் டெலிவரி, கிடைக்கிற கேப்புகளில் எல்லாம் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்கள் மூலம் காமெடி செய்வது என செம க்யூட் கேர்ள் ஆக கலக்கியிருக்கிறார்! ( கண்டிப்பா அம்மா மாதிரியே நீயும் ஒரு ரவுண்டு வருவேம்மா…)

ஹீரோயிஸம் என்பதையும் தாண்டி குழந்தைகளையும் கவர வேண்டுமென்கிற விஜய்யின் சமீபகால படங்களில் மாற்றம் தெரிவது வரவேற்கத்தக்கது. அதற்கு வலு சேர்ப்பது போல விஜய் – நைனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்திருக்கிறது.

அதிகம் அலட்டல் இல்லாத வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் பிரபல இயக்குநர் மகேந்திரன். அப்பப்பா ”தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்று சொல்வதைப் போல அவர் சண்டை போடாவிட்டாலும் பார்வையும், குரலுமே டெரர் வில்லத்தனத்தின் உச்சம்!

”இந்த உலகத்துல சின்னவங்க பெரியவங்கன்னு யாருமே இல்லை, நல்லவங்க – கெட்டவங்க ரெண்டே பேரு தான்”, ”சாவுக்கு மேல உனக்கு ஒரு வலியை கொடுக்கணும்”, ”ஒரு பொண்ணுகிட்ட இன்னொரு பொண்ணு தான் மனசு விட்டுப் பேச முடியும்” என சின்ன சின்னதான வசனங்கள் மனசை ஈர்க்கின்றன.

ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவில் விஜய் படு ஸ்மார்ட்டாக தெரிகிறார். நைனிகா க்யூட் பேபியாக அசத்துகிறார். விக்கு வைத்த எமி கூட கேமராவில் அழகோ அழகு, சமந்தா கொஞ்சம் மேக்கப்பை குறைத்திருக்கலாம்!

ஜி.வி.பிரகாஷின் இசையில் பின்னணி இசை ‘ஹை ஸ்பீடு’ என்றால் பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம்! முதல் பாதி வேகமாக நகர்ந்தாலும் இடைவேளைக்கும் பிறகு சில காட்சிகளை எடிட்டர் பிரவீன் கே.எல் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

”எந்த குழந்தையும் இந்த உலகத்தில் கெட்டவனாக பிறப்பதில்லை, மீறி அவன் கெட்டவன் ஆகிறான் என்றால் அதற்கு அவனது பெற்றோர் வளர்ப்பு தான் காரணம்” என்கிற சமூக கருத்தை தான் ஆக்‌ஷன் ப்ளஸ் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக தந்திருக்கிறார் இயக்குநர் அட்லி.

கருத்து நன்றாக இருந்தாலும் ஏற்கனவே பார்த்த பாட்ஷா, என்னை அறிந்தால், சத்ரியன் போன்ற படங்களின் சாயலையும், வில்லனுக்கு தண்டனை கொடுக்கும் விஜய்யைப் பற்றி பல தரப்பட்டமக்களிடையே மைக்கைப் பிடித்து கருத்து கேட்டு அதை காட்டுவது போன்ற ‘ரொம்ப பழைய’ காட்சியையும் தவிர்த்து விட்டு புதிதாக யோசித்திருக்கலாமே அட்லி சார்!.

அதையும் தாண்டி விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் குடும்பத்தோடு ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இரண்டையும் ஃபேலன்ஸ் செய்து திரைக்கதை அமைக்கப்பட்ட பக்கா மாஸ் படம் தான் இந்த ‘தெறி’.

படத்தோட கிளைமாக்ஸ்ல விஜய் ஃபேன்ஸுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்கப்பா…!

தெறி – பக்கா மாஸ்!