19.1 C
New York
Thursday, April 25, 2024

Buy now

தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும்! சிவகுமார் ஆவேசம்

தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும்! சிவகுமார் ஆவேசம்

தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் பி.எச்.டி.பட்டம்வாங்க முடியும். இந்தக் கேவலம் உலகில் எங்குமில்லை.தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு.

ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து 35வது ஆண்டு கல்வி உதவி தொகை பரிசளிப்பு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் பல்வேறு சூழலிலிருந்து சிரமப்பட்டு கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு பரிசுத் தொகை தலா பத்தாயிரம். என இரண்டரை லட்சம் வழங்கப்பட்டது. திண்டிவனம் ‘தாய்தமிழ்ப் பள்ளி’க்கு ஒரு லட்சமும் ‘வாழை’ அமைப்புக்கு இரண்டு லட்சமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார் “இங்கு வந்திருக்கும் பல மாணவர்கள் வறுமைச் சூழலிலிருந்து வந்தவர்கள். அவர்களின் கதைகளைக் கேட்டு வருத்தமாக இருந்தது. என கதையைக் கேட்டால் உங்களுக்கும் வருத்தமாக இருக்கும்.

நான் பிறந்த பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் நாலு வயதில் 14 வயது அண்ணன் ஒரே நாள் காய்ச்சல் பிளேக்கில் இறந்து விட்டான். 1945–46ல் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ராகிக்கே கஷ்டம். பொங்கல் தீபாவளிக்குத்தான் அரிசிச்சோறு என்கிற நிலை.

தைப் பொங்கலுக்குத்தான் அரிசி சாதம் கிடைக்கும் நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது ‘தைப் பொங்கல் அரிசிச்சோறு போடமுடியாத நீ என்னை ஏன் பெத்தே?’என்று அம்மாவிடம் கேட்டேன்.

வயலுக்கு அம்மா காலை 6மணிக்குப் போய் மாலை6 மணிக்கு வருவார். கழனியில் கஷ்டப்படுவார். 5 குழந்தைகள் இறந்து தங்கிய ஒரே ஆண்குழந்தை நான்தான். பிடி அரிசி ஒளித்து வைத்து ஆக்கிய அந்த சோற்றைத்தான் ஸ்கூலுக்கு எனக்குக் கொடுப்பார். சனி ஞாயிறு அதுவும் இருக்காது! வறுமைச் சூழலால் அக்கா, தங்கையைப் படிக்கவைக்க முடியவில்லை.
இப்போது தீபாவளி, பொங்கல் டிரஸ் எடுப்பது பற்றிப் பேசுகிறோம். எனக்கு சிரிப்பாக வரும். அப்போது இப்படி எடுக்க மாட்டார்கள். சட்டை கிழிந்தால்தான் அடுத்த சட்டை வரும்.

அப்போது எஸ்.எஸ்.எல்.சிக்கு கட்டணம் ஐந்தேகால் ரூபாய் அது கட்டவே சிரமப்பட்டேன் தேர்வுக் கட்டணம். 11.50 கேட்ட போது அம்மா கோபித்துக் கொண்டார்.

நாங்கள் பள்ளியில் க்ரூப் போட்டோ எடுக்க 5 ரூபாய் என்னால் கொடுக்க முடியவில்லை. அதனால் நான் படமே எடுக்க முடியவில்லை. 192 படங்கள் 175 படங்கள் கதாநாயகன் என்று நடித்ததை கணக்கிட்டால் என் முகம் 4 கோடி ப்ரேமில் இருக்கிறது. ஆனால் அந்த 5ரூபாய் இல்லாமல்பள்ளியில் க்ரூப் போட்டோ எடுக்கமுடியவில்லை அப்போது 1957ல் எடுக்க முடியாத படத்தை 50 வருஷம் கழித்து விஜய் டிவி மூலம் எடுத்த போது என் கூட நடித்தபலர் பாட்டியாகி விட்டனர்.

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த இளம்வயது படத்தை இப்போது எடுக்க முடியுமா?

தமிழ் மக்கள் ஏழரை கோடி பேரில் குறைந்தது 3 கோடி பேர் இப்படி வறுமையில் தான் இருக்கிறார்கள்.

படிப்பு அவசியம். படித்து விட்டால் உலகின் எந்த சூழலிலும் பிழைத்துக் கொள்ளாம் எங்கு சென்றாலும் தமிழை மறக்கக் கூடாதுதான். தமிழ் அம்மா போன்றது. ஆங்கிலம் ஆசைமனைவி போன்றது. காதல் மனைவி போன்றது. ஆங்கிலமும் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல மொழியோ கெட்ட மொழியோ. ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழியாக இருக்கிறது. இதெல்லாம் புறவெளி. அகவெளி இன்பம் காண தமிழ்தான் உதவும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2500 ஆண்டு களுக்கு முன்பே கூறியவன் தமிழன். ‘செல்வத்துப் பயன் ஈதல்’ என்றவன் தமிழன். எவ்வளவு உயர்ந்தாலும் அடுத்தவருக்கு உதவுங்கள் என்றவன் தமிழன்.

ஆனால் இவ்வளவு வளமுள்ள தமிழ் இன்று சாகும் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பி.எச்.டி.வாங்க முடியும். இதேபோல தெலுங்கு படிக்காமல் ஆந்திராவில் இருக்க முடியுமா?கன்னடம் படிக்காமல் கர்நாடகாவில் இருக்க முடியுமா?மலையாளம் படிக்காமல் கேரளாவில் இருக்க முடியுமா? இந்தக் கேவலம் உலகில் எங்கும் இல்லை. அம்மா மொழியில் படிக்க வேண்டாமா? தமிழ் மொழிப்பாடம் படிக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்கள். இப்படியே போனால்.. மெல்லத் தமிழினி சாகாது உடனே சாகும். அரசுக்கு. ஒரு வேண்டுகோள்

தமிழ்ப்பாடம் கட்டாயம் வேண்டும் என்று உடனே சட்டம் கொண்டு வாருங்கள்.” இவ்வாறு சிவகுமார் பேசினார்.

சூர்யா பேசும் போது, “நமக்கு இவ்வளவு அதரவு, அன்பு, பாராட்டு, ஊக்கம் தரும் மக்களுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த போது உருவானதுதான் ‘அகரம்’ நூறு இருநூறு என்று ஆரம்பித்து இப்போது ஆயிரம் பேர் உதவி ஊக்கம் பெற்றுள்ளனர். இதில் என் பங்கு சிறிதுதான் இதன் பின்னணியில் பலரது உழைப்பு இருக்கிறது. இது வளரும். எனக்குப் பின்னும் தொடரும்.

படித்தால் மட்டும் போதாது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகவல் தொடர்பு திறனில் நன்றாகப் படிப்பவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள். இதைக் களைய யோசித்த போது சாப்ட் ஸ்கில் வளர்க்க ஒரு பயிற்சி மையம் ஆரம்பிக்க இருக்கிறோம்.இதற்கு மதுராந்தகத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை சாய்ராம் குழுமம் வழங்கியுள்ளது.

உலக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள். ஏன் எதற்கு என்ன என்ன கேளுங்கள். உங்கள் சரியான பாதை எது என்று நீங்களே முடிவு செய்யுங்கள். நான் கூட ஏழாம் வகுப்பில் பெயில் ஆனவன்தான். செய்கிற பணியில் பெருமைப்பட வேண்டும் எல்லாரும் என்ஜினியர் ஆனால் ப்ளம்பர் ஆவதுயார்? வெளிநாட்டில் கூட ஒரு மெக்கானிக் கூட ஒரு முதலாளி போல கர்வப்படுவார். ” இவ்வாறு சூர்யா பேசினார். முன்னதாக அனைவரையும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வரவேற்றார். அகரம் மாணவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். ஜெயஸ்ரீ தொகுத்து வழங்கினார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE