8.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

இறுதிச்சுற்று – விமர்சனம்

பாதி படத்தை எடுத்து விட்டு மீதியை முடிக்க முடியாத இக்கட்டான நிலையை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சந்தித்த போது கை கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

இல்லையென்றால் ரசிகர்களுக்கு இப்படி ஒரு புதுவிதமான ரசனைச்சூழல் கிடைத்திருக்காது.

மூன்று பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிப்படமாக தயாரித்து ஒரு பக்காவான ஸ்டோரியுடன் ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘இறுதிச்சுற்று’.

பொசுக்கு பொசுக்கென்று வரும் முன் கோபத்தாலேயே பாக்ஸிங் வீரராகும் தகுதியையும், அதனால் தன் மனைவியையும் மிஸ் பண்ணும் ஹீரோ மாதவன் ‘பொம்பள பொறுக்கி’ என்கிற அடையாளத்தோடு பெண் பாக்ஸர்களுக்கு கோச்சாக வேலை செய்கிறார். அதே முன் கோபத்தால் உயர் அதிகாரியின் கடுங்கோபத்துக்கு ஆளாக, மாதவனை சென்னைக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார் அந்த உயர் அதிகாரி.

ஹரியானாவில் இருந்து சென்னைக்கு வரும் மாதவன் அங்கு அவர் ஒரு பாக்ஸரை உருவாக்கியே தீர வேண்டும்.

அவர் எதிர்பார்ப்புக்கு ஏத்த ஆளாகத் தெரிகிறார் மீனவ குப்பத்தைச் சேர்ந்த துறுதுறு சுட்டிப் பெண்ணான நாயகி ரித்திகாசிங்.

கடலில் கிடைக்கும் மீனை விற்று காசு பார்த்தோமா? அக்கா, நண்பர்களுடன் சேர்ந்து ஊரையே ஜாலியாக சுற்றித் திரிந்தோமா? என்றிருக்கும் ரித்திகாவிடம் தினமும் 500 ரூபாய் செலவுக்கு கொடுத்து அவரிடம் இருக்கும் பாக்ஸிங் திறமையை வெளிக்கொண்டு வர ஆசைப்படுகிறார்.

ஆனால் மாதவன் மீது இருக்கும் ‘பொம்பள பொறுக்கி’ இமேஜால் ஏனோதானோவென்று பயிற்சி எடுக்கும் ரித்விகாவை, முதலில் இந்திய வீரராக்கி பிறகு இண்டர் நேஷனல் லெவலுக்கு கூட்டிச் செல்ல சீரியசாக முயற்சிக்கிறார்.

மாதவனின் அந்த முயற்சிக்கு அடுத்தடுத்த வரும் தடங்கல்களை தாண்டி எப்படி ரித்விகாவை ஜெயிக்க வைக்கிறார்? அதற்கு ரித்விகா ஒத்துழைப்பு கொடுத்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவனுக்கு இது தமிழில் ரீ-எண்ட்ரி!

அறிமுகக் காட்சியில் ஒரு ‘பொம்பளை பொறுக்கி’யாக அடையாளப்படுத்தப்படும் மாதவன் அடுத்தடுத்த காட்சிகளிலும் நடிப்பில் அசால்ட் தான்! மீட்டிங் என்று அழைப்பு வர கையில் பீர் டின்னுடன் கெத்தாக உட்கார்ந்து பேசுவதும் ”மீட்டிங் நேரத்துல சரக்கடிச்சுட்டு வர்றீங்க” என்று ஒருவர் எகிறும் போது ”யோவ் நான் சரக்கடிக்கிற டைம்ல உன்னை யாருய்யா மீட்டிங் வைக்கச் சொன்னா?” என்று பதிலுக்கு எகிறுவதும் செம அப்ளாஸ் ஷாட்ஸ்!

அவர் எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் முகத்துக்கு நேரே பட் பட்டென்று பேசுவதும், ”உன்னை விட எனக்கு அவன்மேல ரொம்பக் கோவம் இருக்கு” என்று சொல்லும் நாசரே ஒரு இக்கட்டான சூழலில் வந்து நிற்கும் மாதவனிடம் ”யோவ் நீ உண்மையிலேயே ரொம்ப நல்லவன்யா” என்று சொல்கிற காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் காதை கிழித்தெடுக்கிறது.

தரமான படத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டுமென்கிற பொறுப்பு நல்ல கலைஞனுக்குரிய பொறுப்பு மாதவனிடம் இருப்பதாகவே இந்தப் படத்தை கருதலாம். ஒவ்வொரு காட்சியிலும் அப்படி ஒரு ஆளுமை!

இவர் இப்படியென்றால் அறிமுக நாயகி ரித்திகா சிங்கோ நடிப்பில் பிண்ணி பெடலெடுக்கிறார். ”யோவ் தூரப்போயா உன் மூஞ்சியப் பார்க்கவே முடியல… ந்ந்தா அந்தம்மாக்கிட்ட மீனை வாங்கு, உனக்கும் அதுக்கும் செம பொருத்தமா இருக்கும், கெழவா தள்ளிப்போயா…” என்று குப்பத்துப் பாஷையில் பேசுகிற காட்சியில் தமிழ்சினிமாவில் இப்படி ஒரு ‘துடிப்பான’ நாயகியைப் பார்த்து எத்தனை நாளாகி விட்டது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அட இவருக்கு இது முதல் படமா..? விட்டா கூத்துப்பட்டறைக்கே ஆக்டிங் சொல்லிக் கொடுப்பார் போல!

ரித்திகாவின் அக்காவாக வரும் மும்தாஸ் சர்க்கார், மாதவனின் மாமனாராக வரும் ராதாரவி, ஜூனியர் கோச்சாக வரும் நாசர், தேவ் ஜாகீர் உசேன் என படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் ரசிகர்களை இருக்கையோடு கட்டிப்போடுகிறது.

ரித்திகாவின் குப்பத்து அப்பாவாக வரும் காளி வெங்கட் காசுக்காக மதம் மாறுவதும், கர்த்தரே.. அல்லோலூயா என்று ஜெபிப்பதுமாக கலகலப்பூட்டுகிறார்.

‘செளகார் பேட்டை செவப்புத் தோலுக்கு ஆசைப்பட்டு சோரம் போயிட்டேயேடா சாமிப்புள்ள..’. ‘சார்,நாங்க கக்கூஸ் கழுவத் தான் லாயக்கு… ஆனா கப்’பு உங்க வாயிலிருந்துல்ல வருது…’ மாதிரியான வசனங்கள் கைதட்டலுக்குரியவை.

ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் வித்தியாசமான கலர் டோனும், சதீஷ் சூர்யாவின் ‘கத்தரி’யின் கூர்மையும் பிரமாதம்..

படத்தின் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் சந்தோஷ் நாராயணின் இசை. பாடல்களை விட்டு விடுங்கள். மாதவனும் – ரித்திகா சிங்கும் இணையும் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பின்னணி இசையை போட்டு விட்டிருப்பார் பாருங்கள். அத்தனை ரசிகர்களையும் புல்லரிக்க வைத்து விடுகிறது அவரது ரம்மியமான இசை!

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, எல்லா விளையாட்டிலும் அரசியல் இருக்கும்! ஆனால் அது இவ்வளவு தூரத்துக்கு இருக்குமா? என்று வெகுஜன ரசிகனும் அதிர்ச்சியடைகிற அளவுக்கு உண்மைகளை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா இது பல உண்மைச் சம்பவங்களின் பதிவு என்பதையும் மறக்காமல் சொல்லி விடுகிறார்.

பொதுவாகவே இந்திய விளையாட்டுச் சந்தையில் இருக்கும் அதிகார வர்க்கத்தினரின் பாலிடிக்ஸ் என்பது வெளி உலகத்துக்கு பெரிய அளவில் தெரியாத விஷயம்.

‘ஜீவா’ படத்தில் கிரிக்கெட்டில் ஒரு சமூகத்தினர் மட்டும் காலங்காலமாக செய்து வரும் ஆளுமையை டைரக்டர் சுசீந்திரன் தோலுரித்துக் காட்டியிருந்தார். அதே பாணியில் இந்தப் படத்தில் குத்துச் சண்டை விளையாட்டில் இருக்கிற, குறிப்பாக பெண்கள் குத்துச்சண்டை விளையாட்டில் இருக்கிற அதிகார வர்க்கத்தினரின் ஏகபோகம், தரங்கெட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட மோசமான பக்கங்களை அம்பலப்படுத்தியிக்கிறார் பெண் இயக்குநர் சுதா கொங்கரா.

அந்த துணிச்சலுக்கும், திறமைக்கும் இந்தாங்க மேடம் ஒரு பொக்கே!

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE